அரியலூர் அருகே நெற்பயிரை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த ட்ரோன் கருவி அறிமுகம்

தா.பழூர் : நெற்பயிரை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த ட்ரோன் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டத்தில் சம்பா நடவு பணிகள் முடிந்து பயிர்கள் தூர்கட்டும் பருவத்தில் உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள பருவ மழையினால் பயிர்கள் மூழ்கி தண்ணீர் வடிய தொடங்கியுள்ளது, தற்போது நிலவும் சீதோஷண தட்பவெப்ப நிலையில் வெப்பம், குளிர், வெப்பம் என மாறி மாறி காணப்படுகிறது.

தற்போது வயலில் இலை சுருட்டுப் புழு, குருத்துப் பூச்சி மற்றும் பாக்டீரியா இலைக்கருகல் போன்ற பிரச்னைகள் உள்ளது. எனவே இந்த பிரச்னைகளுக்கு தீர்வு தரும் விதமாக வேளாண் அறிவியல் மையம் மற்றும் மிவிப்ரோ நிறுவனமும் இணைந்து ஹேர்போலிவ் பிளஸ் எனும் இயற்கை மருந்தை தயாரித்து வழங்குகிறது. மேலும் ஆளில்லா விமானம் மூலம் குறைந்த செலவில் மருந்து தெளித்து தரப்படுகிறது, இம் மருந்தின் மூலம் இலை சுருட்டுப்புழு, குருத்துப்பூச்சி, பாக்டரிய இலைக்கருகல் கட்டுப்படுத்தப்பட்டு பயிர்கள் நல்ல சூழ்நிலையில் வளர்கிறது.

இந்நிகழ்ச்சியில் சோழமாதேவியை சேர்ந்த விவசாயிகளும், வேளாண்மை அறிவியல் மையம் தலைவர் டாக்டர் நடனசபாபதியின் அறிவுரையின் பேரில் தலைவர் மற்றும் முதன்மை விஞ்ஞானி அழகு கண்ணன் முன்னிலையில், அசோக்குமார் மற்றும் மனோஜ் கிருஷ்ணா தலைமையில், பூச்சி மற்றும் நோய்களிடம் இருந்து காப்பாற்றும் இயற்கை மருந்தை ட்ரோன் மூலம் தெளித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். மேலும் தொழில்நுட்ப வல்லுநர் பூச்சியியல் துறை, அசோக்குமார் கூறும் போது, இந்த இயற்கை மருந்தானது பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படும் சுற்றுப்புற சூழலுக்கு கேடு இல்லாமல் மருந்தில்லா விளைபொருட்கள் விவசாயிகளுக்கு கிடைக்கும்.

மேலும் சாகுபடிக்கான செலவு பெருமளவில் குறையும் என்று தெரிவித்தார். மேலும் ஜெயங்கொண்டம், குறிச்சி, தா.பழூர் விவசாயிகள் அனைவரும் ட்ரோன் மூலம் குறைந்த செலவில் நெல்லுக்கு மருந்து தெளிக்க முன்வந்துள்ளதாக தெரிவித்தார் .9791008092, 8760274533 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளாம், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அணுகி முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

Related Stories:

More