பதிவுத்துறை அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு: விஐபியின் சொத்து மாற்றம் நடந்ததா?

சேலம்:  சேலம் சூரமங்கத்தில் மேற்கு பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் நேற்று மாலை 5.45 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக உள்ளே புகுந்து, அலுவலக கதவை பூட்டினர். இதில் உள்ளே இருந்த 3 புரோக்கர்களை மடக்கினர். உள்ளே இருந்த பொதுமக்களை விசாரித்து அனுப்பி வைத்தனர். மேலும் சார்பதிவாளர் இந்துமதி மற்றும் உதவியாளர் காவேரி ஆகியோரது அறைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத பணம் 55 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மாலை 5.45 மணிக்கு துவங்கிய சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. இதில் பத்திர பதிவுக்கு கூடுதல் பணம் பெறப்பட்டுள்ளதா, பணத்திற்காக பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தப் பதிவு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றுகிறவர்தான் காவேரி. கோவை மண்டலத்தில் சர்வாதிகாரி போல செயல்பட்டு வந்த செல்வக்குமார் சில நாட்களுக்கு முன்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கோவை மண்டலத்தில் இவரை மீறி சாதாரண ஊழியர் முதல் டிஐஜிக்கள் வரை அவருக்கு வேண்டியவர்கள் அல்லது அவரால் மேலிடத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் நடந்து வந்தது. அதேபோலத்தான் கடந்த அதிமுக ஆட்சியில், சேலம் மண்டலத்தில் காவேரியை மீறி உதவியாளர் முதல் டிஐஜிக்கள் வரை யாரும் உள்ளே வர முடியாது. சேலத்து விஐபிக்களுக்கு மிகவும் வேண்டியவர் காவேரி. இவரை எல்லோரும் சேலத்தின் செல்வக்குமார் என்றுதான் அழைப்பார்கள். சர்வ வல்லமை பெற்றவராக வலம் வந்தார். பணி மாறுதலுக்கு அதிகாரிகள் இவரை சந்திப்பதுதான் வழக்கம். பத்திரப்பதிவு துறையில் பணியாற்றும் ஐஜிக்கள் மற்றும் செயலாளர்கள் இவரை அண்ணா என்றுதான் அழைப்பார்கள். சேலத்தில் உள்ள விஐபிக்கள் சொத்துக்களை வாங்கும்போதும், பெயர் மாற்றம், பினாமி பெயர்களில் சொத்துக்களை வாங்குவது என அனைத்து வேலைகளையும் காவேரிதான் செய்வார். மேலும், அவர் பணியாற்றும் அலுவலகத்தில் மாவட்ட பதிவாளராக இருந்தாலும், சார் பதிவாளராக இருந்தாலும், பதிவு பணிகளை காவேரியிடமே வழங்குவார்கள். அவர்தான் பதிவு பணிகளை மேற்கொள்வார்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது விஐபியின் வீட்டில் இவரை சர்வ சாதாரணமாக பார்க்கலாம். உதவியாளருக்கு எந்த பதிவு அலுவலகத்திலும் தனி அறை கிடையாது. ஆனால் காவேரிக்கு தனி அறை உண்டு. அவரது அறையில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. விஐபிக்களுக்கு பதிவு செய்யும்போது, தனி அறையில் அமர்ந்துதான் பதிவு செய்வார். இவர், மாலை நேரங்களில் அலுவலகத்தில் இருக்கிறார் என்றால், முக்கியமான பதிவு நடைபெறுவதாக அதிகாரிகள் கருதிக் கொண்டு நமக்கு ஏன் வம்பு என்று பேசாமல் வீட்டுக்குச் சென்று விடுவார்கள். பதிவு முடிந்தவுடன்தான் காவேரி வீட்டுக்கு செல்வார்.

இந்தநிலையில், நேற்றும் முக்கியமான பதிவு நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் சோதனை நடத்தியபோதுதான் ரூ.55 ஆயிரம் பணம் சிக்கியுள்ளது. இவர், நேற்று முக்கியமான விஐபிக்காக பதிவு செய்தாரா அல்லது பதிவுக்காக காத்திருந்தாரா என்பது தெரியவில்லை. அலுவலகம் முடியும் நேரத்தில்தான் சோதனை தொடங்கியுள்ளது. காவேரி பணியாற்றும் அலுவலகத்தில் சோதனை நடந்து வருவது பதிவுத்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் இவர் பதிவு செய்த பதிவுகள் குறித்து விசாரித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில், இவரது சொத்து விவரங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை அல்லது பதிவுத்துறை அதிகாரிகள் விசாரித்தால் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த அதிரடி சோதனையினால் அதிகாரிகள் மற்றும் புரோக்கர்கள் பீதியடைந்துள்ளனர்.

Related Stories: