மீன் பிடித்து கொண்டிருந்த போது சோகம்; பழையாற்றில் மூழ்கி வாலிபர் பலியானது எப்படி?.. உருக்கமான தகவல்கள்

நாகர்கோவில்: பழையாற்றில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனால் பழையாற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை தாழக்குடி அடுத்த வீரநாராயணமங்கலம் பகுதியை சேர்ந்த இசக்கிராஜா (35) என்பவர் நேற்று  தனது வீட்டு அருகில் உள்ள பழையாற்றில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மீன்பிடிப்பதற்காக வலையை வீசியுள்ளார். அப்போது வலையின் பாறை இடுக்கில் சிக்கியுள்ளது. அதனை எடுக்க முயன்ற போது இசக்கி ராஜா வழுக்கி விழுந்தார்.

தண்ணீர் அதிகமாக வந்ததால், இசக்கிராஜா இழுத்து செல்லப்பட்டார். அவரால் நீந்தி வெளியே வர முடிய வில்லை. சிறிது நேரத்தில் அவர் மாயமானார். இதை பார்த்ததும் அவரது நண்பர்கள் கூச்சலிட்டனர். தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நாகர்கோவில் நிலைய அலுவலர் (பொறுப்பு) பென்னட் தம்பி தலைமையில் தீயணைப்பு துறையினர் சென்று இசக்கி ராஜாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவரது நண்பர்களும் இணைந்து தேடினர்.  சுமார் மூன்று மணி நேரம் தேடுதலுக்கு பின் இசக்கி ராஜா சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை பார்த்ததும் குடும்பத்தினர், நண்பர்கள் கதறி அழுதனர்.

ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இசக்கிராஜா உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இசக்கி ராஜா டெம்போ டிரைவராக இருந்தார். உள்நாட்டு  மீன்பிடி சங்கம் ஒன்றில் உறுப்பினராகவும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: