தாராபுரத்தில் கூலிப்படை ஏவி கொல்லப்பட்ட ஐகோர்ட் வக்கீல் உடலை வாங்க மறுத்து தாய் மறியல்: திருப்பூர் அரசு மருத்துவனையில் பதற்றம்

தாராபுரம்: தாராபுரத்தில் கூலிப் படை ஏவி கொல்லப்பட்ட ஐகோர்ட் வக்கீல் உடலை வாங்க மறுத்து தாய் மறியல் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (35). சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இவரது தந்தை லிங்கசாமி கடந்த 15 ஆண்டுக்கு முன்பு காங்கயம் அருகே கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு ஈரோடு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், முருகானந்தத்தின் சித்தப்பா தண்டபாணி உட்பட அனைவரும் விடுதலை ஆகினர்.

சித்தப்பா தண்டபாணிக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தர முருகானந்தம் முடிவு செய்தார். அவர் நடத்தும் மெட்ரிக் பள்ளியின் 4வது தளம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்று அதனை கோர்ட்டு மூலம் இடித்து தள்ளினார். ஒட்டுமொத்த பள்ளி கட்டிடமும் முறைகேடாக கட்டப்பட்டுள்ளதாக வழக்கு தாக்கல் செய்தார். இது தொடர்பாக பள்ளியின் உறுதி தன்மையை பார்வையிட நேற்று முன்தினம் முருகானந்தம், ரகுராம் (35), அவரது வக்கீல் தினேஷ் (35) உள்பட 4 பேர் பள்ளிக்கு சென்றனர். அப்போது அப்பகுதியில் பதுங்கி இருந்த கூலிப்படையினர் முருகானந்தம், ரகுராம், தினேஷ் ஆகியோரை வெட்டினர். இதில் முருகானந்தம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

இந்நிலையில் பள்ளியின் தாளாளர் தண்டபாணி மற்றும் கூலிப்படையை சேர்ந்த திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (29), சேலம் போலூர் பகுதியை சேர்ந்த ராம் குமார் (22), நாமக்கல் சுந்தரம் (26), திருச்சி நாகராஜன் (29), தாராபுரம் நாட்டு துரை (65) ஆகியோர் போலீசில் சரண் அடைந்தனர். இந்நிலையில், திருப்பூரில் அரசு மருத்துமவமனையில் வக்கீல் முருகானந்தத்தின் உடலை பிரேத பரிசோதனை செய்து தாய் சுபத்ராதேவி மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முயன்றனர். அப்போது, உடலை வாங்க மறுத்து உறவினர் திருப்பூர்- தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளியின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய முருகானந்தம் சென்ற தகவலை தாராபுரத்தை சேர்ந்த சர்வேயர் ஒருவர் தாளாளர் தண்டபாணிக்கு தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையிலேயே தாளாளர் கூலிப்படை ஏவி முருகானந்தத்தை கொன்றுள்ளனர். எனவே, அந்த சர்வேயரை கைது செய்ய வேண்டும். தண்டபாணியின் மகன் வக்கீல் கார்த்திகேயனையும் கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று மறுத்துவிட்டனர். இதனையடுத்து திருப்பூர் எஸ்பி கிரீஸ் யாதவ் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்த தாய் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தாராபுரத்துக்கு புறப்பட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post தாராபுரத்தில் கூலிப்படை ஏவி கொல்லப்பட்ட ஐகோர்ட் வக்கீல் உடலை வாங்க மறுத்து தாய் மறியல்: திருப்பூர் அரசு மருத்துவனையில் பதற்றம் appeared first on Dinakaran.

Related Stories: