மலையாள நடிகை கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த், தாரா சுதாரியா ஆகியோர் நடிப்பில் பான்வேர்ல்ட் படமாக ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ உருவாகிறது. ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார். யஷ் நடிக்கும் ‘ராயா’ என்ற கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோ, அவரது 40வது பிறந்தநாளில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ வைரலான நிலையில், சில காட்சிகள் பல்வேறு தரப்புகளில் இருந்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.
இந்நிலையில், இயக்குனர் ராம் கோபால் வர்மா வெளியிட்டுள்ள பதிவில், இயக்குனர் கீது மோகன்தாஸை புகழ்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘கீது மோகன்தாஸ் இயக்கிய ‘டாக்ஸிக்’ படத்தின் டிரைலரை பார்த்தேன். அவர் பெண்கள் முன்னேற்றத்துக்கான ஒரு குறியீடு. இந்த பெண்ணுடன் ஒப்பிட, எந்த ஒரு ஆண் இயக்குனருக்கும் தகுதி இல்லை. ஒரு குறிப்பிட்ட காட்சியை அவர் எப்படி படமாக்கினார் என்று எனக்கு இப்போதும் நம்ப முடியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கீது மோகன்தாஸ் இயக்கிய ‘லையர்ஸ் டைஸ்’ என்ற இந்தி படம் இரண்டு தேசிய விருதுகளையும், ‘மூத்தோன்’ என்ற மலையாள படம் கேரள அரசின் மாநில விருதையும் வென்றிருந்தது.
