பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 10ம் தேதி உலகம் முழுவதும் ‘பராசக்தி’ படம் திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இதில் ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா, குரு சோமசுந்தரம், ராணா டகுபதி நடித்துள்ளனர். மலையாள இயக்குனரும், நடிகருமான பசில் ஜோசப் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், கொச்சிக்கு புரமோஷனுக்காக சென்றிருந்த சிவகார்த்திகேயன் அதை உறுதி செய்துள்ளார். அங்கு அவர் பேசுகையில், ‘அனைவருக்கும் பிடித்த; எனக்கு மிகவும் பிடித்த பசில் ஜோசப் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த ரகசியத்தை சொல்ல சுதா கொங்கராவிடம் அனுமதி வாங்கிவிட்டேன்.
பசில் ஜோசப்புடன் அதிகமாக பேசியிருக்கிறேன். இலங்கையில் அவரது படப்பிடிப்பு முடிந்த பிறகு சில நாட்கள் தங்கியிருந்தார். அந்த நாட்கள் ஜாலியாக கடந்து சென்றது’ என்றார். மலையாளத்தில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் இருக்கும் பசில் ஜோசப், தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர் என்பதால், ‘பராசக்தி’ படத்தில் அவரை நடிக்க வைத்துள்ளனர். இது இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் 1960 காலக்கட்டத்தில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களை மையமாக வைத்து ‘பராசக்தி’ படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் யூடியூப்பில் வைரலாகியுள்ளது. இதுவரை 5 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அதை பார்த்து ரசித்துள்ளனர்.
