சென்னை: கடந்த 2024ல் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் நடிப்பில் ரிலீசான பான் இந்தியா படம், ‘கல்கி 2898 ஏடி’. புராணத்தில் வரும் கதாபாத்திரங்களை கொண்டு அறிவியல் புனைவுக்கதையாக உருவான இப்படம், உலக அளவில் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இதில் பைரவா, கர்ணன் ஆகிய இரட்டை வேடங்களில் பிரபாஸ், அஸ்வத்தாமன் ரோலில் அமிதாப் பச்சன், யாஸ்கின் என்ற வில்லன் கேரக்டரில் கமல்ஹாசன், சுமதி என்ற வேடத்தில் தீபிகா படுகோன் நடித்திருந்தனர். கமல்ஹாசனுடைய யாஸ்கின் கதாபாத்திரம் பல்வேறு தரப்பினரால் ரசித்து பாராட்டப்பட்டது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் எப்போது உருவாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் கேட்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், 2ம் பாகத்துக்கான படப்பிடிப்பை வரும் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் நாக் அஸ்வின் தொடங்க திட்டமிட்டுள்ளார். அப்போது கமல்ஹாசன், பிரபாஸ் மோதும் அதிரடி சண்டை காட்சி படமாகிறது. முதல் பாகத்தில் நடித்த தீபிகா படுகோன், 2ம் பாகத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். எனவே, அந்த கேரக்டரில் நடிக்கும் ஹீரோயின் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் ‘ஸ்பிரிட்’, ஹனு ராகவபுடி இயக்கத்தில் ‘ஃபௌஸி’ ஆகிய படங்களில் பிரபாஸ் நடித்து வருகிறார். இப்படங்களை முடித்த பிறகு ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2ம் பாகத்தின் படப்பிடிப்பில் பிரபாஸ் பங்கேற்பார் என்று தெரிகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 3’ என்ற படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை.
