மும்பை: அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கும் ஆஸ்கர் விருது போட்டியில், இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ‘ஹோம்பவுண்ட்’ என்ற இந்தி படத்தை நீரஜ் கேவான் இயக்கியுள்ளார். கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஜான்வி கபூர், இஷான் கட்டர், விஷால் ஜெத்வா நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதை தனது நாவலை காப்பியடித்து உருவாக்கப்பட்டது என்று குற்றச்சாட்டு சுமத்தியுள்ள பத்திரிகையாளரும் மற்றும் எழுத்தாளருமான பூஜா சாங்கோய்வாலா, தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
அதில், ‘கடந்த 2021ல் நான் எழுதிய இதே பெயரிலான நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எனது நாவலின் காட்சிகள், உரையாடல், கதை அமைப்பு உள்பட பல்வேறு சம்பவங்களை அப்படியே படமாக்கியுள்ளனர்’ என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் தர்மா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இப்படம் பஷாரத் பீரின் கட்டுரையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. அதிகாரப்பூர்வமான உரிமையை பெற்று தயாரான படம் இது. அதற்கான எல்லா உரிமைகளும் சட்டபூர்வமாக பெறப்பட்டுள்ளது. படம் தொடர்பாக வந்துள்ள நோட்டீசுக்கு தர்மா புரொடக்ஷன்ஸின் சட்டக்குழு முறையாக பதிலளித்துள்ளது’ என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
