சென்னையில் ஓட்டலை நடத்துகிறார் ரங்கா. ‘பிளாக் காட்’ என்ற செக்யூரிட்டி நிறுவனம், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. சூதாட்டம் மற்றும் கிரிக்கெட் மூலம் குவியும் பணத்தைக் கையாளும் அவர்களிடம் ரங்காவின் ஓட்டல் சிக்குகிறது. அந்த ஓட்டலில் வைத்து பணத்தையும், பொருளையும் கைமாற்றுவது ‘பிளாக் காட்’ நிறுவனத்துக்கு வாடிக்கை. அவர்களிடம் இருந்து பணத்தைக் கொள்ளையடிக்க ஒரு கும்பல் முயற்சிக்கிறது. சட்ட விரோத கும்பலிடம் இருந்து ஓட்டலை ரங்கா மீட்டாரா என்பது மீதி கதை.
ரங்கா தயாரித்து எழுதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். முதல் படம் என்பதால், சூழ்நிலையின் பதற்றத்தை அமைதியாக வெளிப்படுத்தியுள்ளார். அழகான ரியா இயல்பாக நடித்துள்ளார். செக்யூரிட்டி நிறுவனம் நடத்தும் முன்னாள் ராணுவ அதிகாரி நிதின் மேத்தா சிறப்பாக நடித்திருக்கிறார். ஓட்டல் பிசினஸில் ஈடுபட்டு, எதிர்பாராத திருப்பத்துக்கு உதவும் இளங்கோ குமணன் மற்றும் வத்சன் எம்.நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரணி, விஷால், ராம், தன்ஷிவி, நித்யநாதன் ஆகியோர், தங்களுக்கான கேரக்டரில் யதார்த்தமாக நடித்துள்ளனர்.
பேமிலி ஆக்ஷன் திரில்லர் டிராமாவான இதில், திரைக்கதையை வேகப்படுத்தி இருக்க வேண்டும். நீருக்கு அடியில் இடம்பெற்ற காட்சிகளைப் படமாக்கிய விதம் பாராட்டுக்குரியது. ஜென் மார்டின் பின்னணி இசை, எம்.சரத்குமார் மோகன் ஒளிப்பதிவு கதையை நகர்த்த உதவியுள்ளது. பாடலுக்கு சிவ பத்மயன் இசை அமைத்துள்ளார்.