×

மிஸ் யூ விமர்சனம்

திரைப்படம் இயக்க தயாரிப்பாளரிடம் கதை சொல்லி காத்திருக்கும் உதவி இயக்குனர் சித்தார்த், வாழ்க்கையையே வெறுத்துப் புலம்பும் கருணாகரனை எழும்பூர் ரயில் நிலையத்தில் சந்தித்து, அவரது மனதில் நம்பிக்கை விதையைத் தூவுகிறார். பிறகு அவரது அழைப்பின்பேரில் பெங்களூருவிலுள்ள வீட்டில் தங்கி, அவரது காஃபி ஷாப்பில் ஆஷிகா ரங்கநாத்தைச் சந்தித்ததும் காதல் கொள்கிறார். அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதம் கேட்கும்போது, ஆஷிகா ரங்கநாத் அதிர்ச்சி அடைகிறார்.

காரணம், ஏற்கனவே அவர் சித்தார்த்தை காதல் திருமணம் செய்திருந்தவர். இந்த டிவிஸ்ட்டை தழுவிதான் மீதி கதை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் முழுக்க காதல் ரசத்தைப் பிழிந்து தந்திருக்கிறார், சித்தார்த். ஒரு பாடலுக்கு அவர் ஆடி அலுத்ததும், ‘ரொம்ப நாளைக்குப் பிறகு ஆடினா இப்படித்தான் கால் வலிக்கும்’ என்ற கருணாகரனின் டைமிங் பன்ச், தியேட்டரை சிரிப்பொலியால் குலுங்க வைக்கிறது.

சித்தார்த் கேரியரில் இதுவும் ஒரு மறக்க முடியாத படம். அழகு, அம்சம், இயல்பான நடிப்பு என்று வசியப்படுத்துகிறார், ஆஷிகா ரங்கநாத். படம் முழுக்க கருணாகரனின் காமெடி பன்ச் இடம்பெற்று, கதையின் திருப்பத்துக்கும் அவர் பேருதவி செய்துள்ளார். பாலசரவணன், மாறன் கோஷ்டியும் அடிக்கடி சிரிக்க வைக்கின்றனர்.

ஜெயப்பிரகாஷ், பொன்வண்ணன், சரத் லோஹித்தஸ்வா, அனுபமா குமார் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர். கே.ஜி.வெங்கடேஷின் கேமரா, இயல்பை தந்துள்ளது. ஆர்.அசோக்கின் வசனங்கள் யதார்த்தம். ஜிப்ரான் வைபோதா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு பெரிய பலம். பிடிக்காத பெண்ணையும் எப்படிக் காதலிக்க வைப்பது என்று பாடம் நடத்தியுள்ளார், இயக்குனர் என்.ராஜசேகர்.

Tags : Siddharth ,Karunagaran ,Ramambur railway station ,Bangalore ,
× RELATED அல்லு அர்ஜுனுடன் பிரச்னையா? சித்தார்த் பல்டி பாடகர் தாக்கு