மைக்கேல் தங்கதுரை யின் காதலி கவிப்பிரியா மனோ கரன், காட்டில் இருக்கும் ஒரு வீட்டில் நோய்வாய்ப்பட்டு தனிமையில் வசிக்கும் ஸ்ரீரஞ்சனியை கவனித்துக்கொள்ளும் வேலைக்குச் செல்கிறார். ஆள்நடமாட்டம் இல்லாத அங்குள்ள மர்ம வீட்டில் காணப்படும் சில பொருட்கள் பயப்பட வைக்கின்றன. முகம் பார்க்கும் கண்ணாடி தங்கள் குடும்பத்துக்கு ஆகாது என்று ஸ்ரீரஞ்சனி சொல்கிறார். சில நாட்களில் தானும் அங்கு தனிமைப்படுத்தப்பட்டதை அறிந்து பதறும் கவிப்பிரியா மனோகரன், போன் உடைந்ததால் மைக்கேல் தங்கதுரையுடன் பேச முடியாத நிலை ஏற்படுகிறது.
அப்போது அவருடைய தோற்றத்தில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவரது வயதான தோற்றம் பிறருக்குத் தெரிந்தாலும், அவரால் அதை உணர முடியவில்லை. தன்னைச்சுற்றி நடக்கும் மர்மங் களைப் புரிந்துகொள்ளும்போது, மைக்கேல் தங்கதுரை பல்வேறு உருவங்களில் அவரது கண்களுக்குத் தெரிகிறார். மிகப்பெரிய சதிவலையில் சிக்கியதை உணர்ந்த கவிப்பிரியா மனோகரன், பிறகு உயிர் தப்பினாரா? மைக்கேல் தங்கதுரை யார் என்பது மீதி கதை.
காதலி மீது அன்பு பொழியும் மைக்கேல் தங்கதுரை, சுயநலத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் கொடூரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் தியேட்டரை அதிர வைக்கின்றன. அவரது நடிப்பும், வயதான தோற்றமும் கவனத்தை ஈர்க்கின்றன. அழகும், நடிப்புத்திறமையும் கவிப்பிரியா மனோகரனுக்கு பிளஸ் பாயின்டுகள். தன்னைச்சுற்றி நடக்கும் மர்மங்கள் குறித்து பயந்து நடுங்குவது
பரிதாபம். பயமுறுத்தும் வித்தியாசமான கேரக்டரில் நடித்த ஸ்ரீரஞ்சனியும், கலைராணியும் தங்களதுவழக்கமான இமேஜை உடைத்துள்ளனர்.
அடர்ந்த வனத்தை அழகாகவும், அங்குள்ள வீட்டின் மர்மத்தையும் தனது ஒளிப்பதிவின் மூலம் சூர்யா வைத்தி ஆழமாகப் பதிவு செய்துள்ளார். காட்சிகளுக்கு ஏற்ப இசை அமைப்பாளர்கள் விவேக், ஜெஷ்வந்த் மிரட்டியுள்ளனர். பாடல்கள் ரசிக்கும் ரகம். சசி தக்ஷாவின் எடிட்டிங் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளது. ஆர்ட் டைரக்டர் காகி ஜெயசீலனின் அரங்குகள் கவனத்தை ஈர்க்கின்றன. ராமாயணத்தில் சொல்லப்பட்ட சஞ்சீவி மூலிகை சம்பந்தமான கருவுடன், முழுநீள சஸ்பென்ஸ் படத்தை இயக்குனர் அருண் கே.ஆர் கொடுத்துள்ளார். சில காட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்.
The post ஆரகன் விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.