கரூர், ஜூலை 22: கரூரில் ஆள் கடத்தல் மற்றும் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட கன்னியாகுமரியை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் செங்குந்தபுரம் மெயின்ரோட்டில் பழனிச்சாமி (78) என்பவர் சொந்தமாக பால் பண்ணை நடத்தி வந்தார். கடந்த பிப்ரவரி 21ம்தேதி காலை 5 மணியளவில், பழனிச்சாமி பால் பண்ணையை திறக்க வந்த போது வெள்ளை நிற ஸ்விப்ட் காரில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் கடத்த முயன்றதாக கரூர் டவுன் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த 18ம்தேதி காலை 5 மணியளவில் கரூர் பேரூந்து நிலையம் ஷேர் ஆட்டோ ஸ்டாண்டு அருகில் மாரிமுத்து (75) என்பவரை அடையாளம் தெரியாத 5 பேர், கடத்திக்கொண்டு தகர செட்டில் மாரிமுத்துவை அடைத்து விட்டு அவருடைய ஆம்னி கார், செல்போன் மற்றும் பணம் ரூ. 500 கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து கரூர் டவுன் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக டிஎஸ்பி செல்வராஜ் தலைமையில் கரூர் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அதனடிப்படையில், கிடைத்த தரவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு, இந்த சம்பவத்தில் தொடர்புடைய பகவதி(24), மாரிமுத்து(30), விக்னேஷ்வரன்(19), முத்து வீரன்(19), செல்லமுத்து(18), சுரேஷ்(19), கிருஷ்ணா(18), தமிழரசு (18) ஆகியோரை கன்னியாகுமரியில் வைத்து நேற்றுமுன்தினம் (20ம் தேதி) கைது செய்து கரூருக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பகவதி என்பவர் பால் பண்ணையில் 3 மாதம் வேலை பார்த்தாகவும், இவரிடம் பண புழக்கம் அதிகமாக இருந்ததால் இவரை கடத்தி பணம் பறிக்கும் நோக்கத்துடன் கடந்த பிப்ரவரி 21ம்தேதி கடத்த முயற்சி செய்ததாகவும், அதன் பிறகு, கடந்த 18ம்தேதி மீண்டும் பழனிச்சாமியை கடத்த வேண்டும் என்ற நோக்கத்தில், கன்னியாகுமரியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபர்களை அழைத்து வந்து வாடகை காரை எடுத்து காரின் ஓட்டுனரை மாங்காசோளிபாளைத்தில் கட்டி வைத்து, காரின் டிரைவர் செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து ஏற்கனவே, பழனிசாமியை கடத்த முயன்ற போது, பயன்படுத்திய ஸ்விப்ட் கார் மற்றும் ஆம்னி கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை மற்றும் ஆள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து கார்களை மீட்ட டிஎஸ்பி மற்றும் போலீசாரை மாவட்ட எஸ்பி ஜோஸ் தங்கையா பாராட்டினார்.
The post ஆள் கடத்தல், கூட்டுகொள்ளையில் ஈடுபட்ட குமரியை சேர்ந்த 8 பேர் கைது appeared first on Dinakaran.
