கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக தொடக்க கல்வி ஆசிரியர்கள் சாலை மறியல்

கரூர், ஜூலை 19: கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) அமைப்பின் நிர்வாகிகள் 150 பேரை போலீசார் கைது செய்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் அமைப்பின் சார்பில் தமிழகம் முழுதும் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். அதன்படி, கருர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே இந்த அமைப்பினர், நேற்று 2வது நாளாக தமிழக ஆசிரியர் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் இருதயசாமி தலைமையில் ஒன்று கூடினர்.

இதில், சங்க நிர்வாகிகள் பெரியசாமி, கணேசன், மாரிகண்டன், வேலுமணி, அமுதன், செல்வதுரை உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் பெற்று பல ஆண்டுகளாக நியமன ஒப்புதல் வழங்கப்படாமல் ஊதியமின்றி பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு உடனடியாக நியமன ஒப்புதல் வழங்க வேண்டும், காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 115 பெண்கள் உட்பட 150 பேர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக தொடக்க கல்வி ஆசிரியர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: