குளித்தலை, ஜூலை 14: அய்யர்மலை சிவாயம் பிரிவு ரோடு அருகே சாலை ஓரம் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்வதை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை காவிரியில் இருந்து பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக குழாய் மூலம் கோட்டைமேடு, மயிலாடி, வை.புதூர், சத்தியமங்கலம், ஒத்தக்கடை, அய்யர்மலை, இறும்பூதிபட்டி, ஆலமரத்துப்பட்டி, குப்பாச்சிபட்டி, தேசியமங்கலம், கழுகூர், தோகைமலை, தெலுங்குபட்டி, கொட்டப்பட்டி வழியாக மணப்பாறைக்கு காவிரி கூட்டு குடிநீர் செல்கிறது. கூட்டுகுடிநீர் குழாய் செல்லும் பாதையில் அய்யர்மலை சிவாயம் பிரிவு ரோடு அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் 24 மணி நேரமும் தண்ணீர் வீணாக செல்கிறது. இந்த தண்ணீர் அய்யர்மலை கிரிவலப் பாதைக்கு செல்லும் நுழைவு வாயில் வரை செல்கிறது. இதனால் சாலை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை உடனடியாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி வீணாகும் தண்ணீரை சரி செய்து சீரான நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post அய்யர்மலை சிவாயம் பிரிவு ரோடு அருகே குழாய் உடைப்பால் வீணாகும் காவிரி குடிநீர் appeared first on Dinakaran.
