கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக ஆதாரங்களை தேர்தல் ஆணையம் அழித்துள்ளது: ராகுல் காந்தி

டெல்லி: கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக ஆதாரங்களை தேர்தல் ஆணையம் அழித்துள்ளது. வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை, வாக்குப்பதிவு முடிந்த 45 நாட்களில் அழித்துவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பான தரவுகளை வேண்டுமென்றே அழிக்க முயற்சிப்பதாக மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது; “வாக்காளர் பட்டியல்? இயந்திரத்தால் படிக்கக்கூடிய வடிவத்தில் வழங்க மாட்டார்கள். சிசிடிவி காட்சிகள்? சட்டத்தை மாற்றி மறைத்துவிட்டார்கள். தேர்தலின் புகைப்படம்-வீடியோ? இப்போது, 1 வருடத்தில் அல்ல, 45 நாட்களில் அழித்துவிடுவோம். யார் பதில் சொல்ல வேண்டுமோ அவர்களே ஆதாரங்களை அழிக்கிறார்கள். இது தெளிவாகிறது – மேட்ச் பிக்சிங் செய்யப்படுகிறது. மேலும் ஒரு சமரசம் செய்யப்பட்ட தேர்தல் ஜனநாயகத்திற்கு விஷம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடிகளின் வெப்காஸ்டிங் காட்சிகளை பொதுவெளியில் வெளியிடுவது வாக்காளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என்று தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரிகள், இத்தகைய கோரிக்கைகள் வாக்காளர்களின் தனியுரிமை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்கள் 1950 மற்றும் 1951 இன் கீழ் உள்ள சட்ட விதிகள், மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு நேர் முரணானது என்று தெரிவித்தனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக ஆதாரங்களை தேர்தல் ஆணையம் அழித்துள்ளது: ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Related Stories: