மதுரை: அமைச்சர் டிஆர்பி ராஜாவை அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, எஸ்.பி.அரவிந்திடம் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. மதுரை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் திமுகவினர், மதுரை எஸ்பி அரவிந்திடம் இன்று மனு அளித்தனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டிஆர்பி ராஜாவை அவமரியாதை செய்யும் வகையிலும், பொய்களை பரப்பும் வகையிலும், அதிமுக மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசி உள்ளார்.
அரசியல் அமைப்பின்படி பொறுப்பு வகிக்கும் அமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவரது பேச்சு உள்ளது. அரசியல் சுயலாபத்திற்காகவும், தன்னுடைய இருப்பை தக்க வைப்பதற்காகவும், முன்னாள் அமைச்சர் உள்நோக்கத்தோடும், சமூகத்தில் பதற்றத்தை உண்டாக்கும் வகையிலும், பொது அமைதியை கெடுத்து இருபிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையிலும் பேசி உள்ளார். அவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது’’ என்றனர். இதேபோல, ஆர்பி உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உசிலம்பட்டியைச் சேர்ந்த திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமையிலும் திமுகவினர் எஸ்பியிடம் மனு அளித்தனர்.
The post அமைச்சர் குறித்து அவதூறு பேச்சு ஆர்பி உதயகுமார் மீது எஸ்பியிடம் திமுக புகார் appeared first on Dinakaran.