செங்குன்றம் அருகே பெயின்ட் கிடங்கில் பயங்கர தீ விபத்து

புழல், ஜூன் 17: செங்குன்றம் அருகே தனியாருக்கு சொந்தமான பெயின்ட் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட சேமிப்பு கிடங்குகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக, பெயின்ட் உள்ளிட்ட கெமிக்கல் வேதிப்பொருட்களை கொண்ட சேமிப்பு கிடங்குகள் அதிகளவில் உள்ளன. செங்குன்றம் அடுத்த சென்றம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெயின்ட் குடோனில் நேற்று பிற்பகலில் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இதை கண்ட ஊழியர்கள், அங்கிருந்து அலறியடித்தபடி வெளியேறி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், செங்குன்றம், மணலி, மாதவரம், அம்பத்தூர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 6 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பெயின்ட், தின்னர் உள்ளிட்ட வேதியியல் மூலப் பொருட்கள் என்பதால், தீ கொழுந்துவிட்டு வானுயர எரிந்து பேரல்கள் வெடித்து சிதறின. தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் தண்ணீரையும் ரசாயன நுரையையும் பீய்ச்சி அடித்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த, தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பெயின்ட் மற்றும் மூலப்பொருட்கள் நாசமானது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை கட்டுப்படுத்தியதால், அருகில் இருந்த சிலிண்டர் குடோனுக்கு தீ பரவாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த, தீ விபத்து குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post செங்குன்றம் அருகே பெயின்ட் கிடங்கில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: