தேனி மாவட்டத்தில் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து துணை முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (16.6.2025) தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் தேனி மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் , தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டங்களான மகளிர் விடியல் பயணத்திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண், தமிழ்புதல்வன், முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் கனவு இல்லம், மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம், குடிநீர் திட்டப் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் 3,11,612 மாணவ, மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர். பெண்களுக்கான விடியல் பயணத் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் ரூ.32.35 கோடி நடைகள் பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் 2,18,680 மகளிர் மாதம் 1,000 ரூபாய் பெற்று வருகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 6,822 கல்லூரி மாணவிகளும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 5,781 கல்லூரி மாணவர்கள் மாதம் ரூ.1,000 பெற்று வருகின்றனர்.

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 3,20,459 நபர்களுக்கு தொடர் சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் இன்னுயிர்காப்போம். நம்மைக்காக்கும் 48 திட்டத்தின்கீழ் 11,516 நபர்களுக்கு ரூ.7.60 கோடி மதிப்பீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர்காக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 72,148 நபர்களுக்கு ரூ.102.79 கோடி செலவில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 3261 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட பணியாணைகள் வழங்கப்பட்டு, இதுவரை 815 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆற்றிய உரை;
நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் முடிவடைந்து 5வது ஆண்டு தற்போது நடைபெற்று வருகின்றது. கடந்த நான்கு வருடங்களில் முதலமைச்சர் கொண்டுவந்த மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து செயல்படுத்தி வருகின்ற அனைத்து அரசு அலுவலர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முதலமைச்சர் பொறுப்பேற்ற பொழுது அவர் சொன்ன வாக்கியம், எங்களுக்கு வாக்களிக்காதவர்களும் எங்களுடைய செயல்பாடுகளைப் பார்த்து, வாக்களிக்காமல் தவறிவிட்டோமே என்று வருந்தும் அளவிற்கு எங்களுடைய திட்டங்கள் இருக்கும், அப்படிதான் செயல்படுவோம் என்று உறுதிமொழி அளித்திருந்தார். அதை மனதில் வைத்துக் கொண்டுதான் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களையும் தீட்டி வருகின்றார். குறிப்பாக பெண்களுக்கு, பயன்பெறும் வகையில், சுதந்திரம் பெறுகின்ற வகையில் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அதேபோல, கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற வகையில், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், தமிழ்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் இப்படி பல்வேறு முற்போக்கான திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றோம்.

தற்பொழுது, தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் வீட்டு மனைப் பட்டாக்களையும் வழங்கி வருகின்றோம். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 1 லட்சம் வீடுகளை அறிவித்து, படிப்படியாக வீடுகளை அந்த பயனாளிகளிடம் அளித்து வருகின்றோம். இப்படி பெண்கள், மாணவ, மாணவிகள், ஏழை எளியோர், ஒடுக்கப்பட்ட பட்டியல் பிரிவு மக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறுகின்ற வகையில் தான் நம்முடைய அரசு இந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. அடுத்த ஓராண்டும் அந்த நோக்கோடு தான் செயல்பட இருக்கின்றோம்.

இதுபோன்ற சமயங்களில் தான் மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை நம்மிடம் மனுக்களாக அளித்து, நம்மீது நம்பிக்கை வைத்து காத்திருக்கிறார்கள். மனுக்கள் மீது உரிய பதில்களை உரிய காலத்திற்குள் அவர்களுக்கு வழங்க வேண்டியது நாம் அனைவருடைய கடமை. மனுக்களை வெறும் தாள்களாக பார்க்காமல், அவற்றை மனுதாரருடைய வாழ்க்கையாக பாருங்கள் என்று நம்முடைய முதலமைச்சர் அடிக்கடி கூறுவார்கள். அதை மனதில் வைத்து மனுக்களையெல்லாம் நீங்கள் அணுக வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன்.

நகர்ப்புறங்களில் பட்டா கேட்டு நீண்ட நாட்களாக காத்திருப்பவர்களை மனதில் வைத்து நம்முடைய முதலமைச்சர் புதிய அரசாணையை சமீபத்தில் வெளியிட்டார்கள். அதனடிப்படையில் அதிகபட்சம் எத்தனை பேருக்கு பட்டா வழங்க முடியுமோ, உடனடியாக அத்தனை பேருக்கும் பட்டா வழங்கும்படி நான் கேட்டுக்கொள்கின்றேன். சட்டமன்ற தேர்தலை இன்னும் 10 மாதங்களில் இந்த அரசு எதிர்கொள்ள இருக்கின்றது. நம்முடைய அரசினுடைய திட்டங்களை செயல்படுத்துவதுடன், மக்களுடைய அடிப்படை தேவைகளான சாலை வசதி, குடிநீர், மின் விநியோகம் போன்றவற்றையெல்லாம் எந்தவித தொய்வுமின்றி குறித்த காலத்திற்குள் செய்யப்படுவதை நீங்கள் அனைவரும் உறுதி செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.

அதேபோல், இங்கு வந்திருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். கண்டிப்பாக அதையெல்லாம் முதமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, சரிசெய்து, உங்களுக்கு ஒரு தகுந்த பதிலை விரைவில் நம்முடைய சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மூலமாக அளிப்பதற்கு நான் உறுதியளிக்கின்றேன்.

எனவே, அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து, நம்முடைய முதலமைச்சரின் தலைமையிலான அரசிற்கு நல்ல பெயரை நீங்கள் எல்லாம் பெற்றுத் தரவேண்டும் என்று மீண்டும் உங்களையெல்லாம் கேட்டுக்கொண்டு நன்றி கூறி விடைபெறுகின்றேன் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச் செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராமகிருஷ்ணன், ஆ.மகாராஜன், கே.எஸ்.சரவணக்குமார், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், கூடுதல் செயலாளர் ஆர்.வி.ஷஜீவனா, மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங், உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தேனி மாவட்டத்தில் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து துணை முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: