தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீன் பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இக்காலத்தில் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால் இந்த தடை விதிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடை காலம் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது.
இந்த தடைக்காலம் நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தது. இதனால் தமிழ்நாட்டின் சுமார் 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சென்னை திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடல் பகுதியில் உள்ள மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு செல்லவில்லை. குறிப்பாக சென்னை காசிமேடு துறைமுகத்தில் மட்டும் சுமார் 1000க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இவர்கள் இந்த தடைகாலத்தில் தங்களது படகுகள், வலைகளை பழுது பார்த்தல், மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தனர். தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இருந்ததால் பக்கத்து மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மீன்கள் மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. இதனால் மீன்விலை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினம் நள்ளிரவோடு முடிந்தது. மீன்பிடி தடைகாலம் முடிந்ததையடுத்து மீனவர்கள் விசைப்படகுகளில் உற்சாகமாக கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மட்டும் இருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள், மீன் பிரியர்கள், வியாபாரிகள் நேற்று அதிகாலை முதல் மீன் வாங்குவதற்காக காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு அதிக அளவு வந்தனர். அவர்கள் எதிர்பார்த்து வந்தது போல் பெரிய அளவில் மீன்கள் இல்லை. இருந்த போதும் மீன்களின் விலை இரு மடங்கு உயர்ந்து விற்பனையானது.
இதனால் அசைவ பிரியர்கள் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளானர். ஒரு சிலர் விலையை பார்க்காமல் மீன் வாங்கிச் சென்றனர். நேற்று சங்கரா ஒரு கிலோ ரூ.650, கொடுவா ரூ.500, நண்டு ரூ.550, இறால் ரூ.600, கடமா ரூ.450 ரூபாய் சிறிய வகை வஞ்சரம் ரூ.1100 ரூபாய் என என விற்பனை செய்யப்பட்டது. ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றால், கரை திரும்ப குறைந்த பட்சம் 15 நாட்கள் ஆகும். அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வாக்கில் விசைப்படகில் சென்றவர்கள் கரை திரும்ப வாய்ப்புள்ளது.
அப்போது பெரிய வகை மீன்கள் அதிக அளவில் மீன்கள் கொண்டுவரப்படும். அப்போது தான் மீன்விலை குறைய வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதே போல நேற்று சிந்தாதிரிப்பேட்டை மீன்மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மீன் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
The post 61 நாள் தடைகாலம் முடிந்து ஆழ்கடலுக்கு படையெடுத்த காசிமேடு மீனவர்கள்: பெரிய மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் appeared first on Dinakaran.