விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தி புதுச்சத்திரம், எருமப்பட்டி வட்டாரத்தில் சாலையோரம் கொட்டப்படும் தக்காளி

சேந்தமங்கலம் : புதுச்சத்திரம், எருமப்பட்டி வட்டாரத்தில் தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் விரக்தியடைந்த விவசாயிகள் சாலையோரம் தக்காளியை கொட்டியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட சர்க்கார்உடுப்பம், கரடிப்பட்டி, குளத்துப்பாளையம், சேவக்கவுண்டம் பாளையம், நவணி, இடையபட்டி, ரெட்டிபுதூர் மாக்கல்புதூர், எருமப்பட்டி வட்டார பகுதியான பழைய பாளையம், போடிநாயக்கன் பட்டி, முத்துகாபட்டி உள்ளிட்ட பகுதியல், ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சேந்தமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால், தக்காளி செடியில் பூக்கள் உதிராமல் அதிகளவில் காப்புகள் ஏற்பட்டு தக்காளி விளைச்சல் அமோகமாக இருந்து வருகிறது.

தற்போது இப்பகுதிகளில் தக்காளி அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதி விவசாயிகள் கூலி ஆட்களை வைத்து தக்காளியை அறுவடை செய்து நாமக்கல் உழவர் சந்தை மற்றும் சுற்றுவட்டாரத்தில ்நடைபெறும் வாரச்சந்தைகளுக்கு கொண்டுவந்த தக்காளியை விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே தக்காளிக்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஆட்கள் கூலிக்கு கூட தக்காளி விலை போகாமல் உள்ளதால், விரக்தியடைந்த விவசாயிகள் சாலை ஓரங்களில் தக்காளியை கொட்டிச் செல்கின்றனர். இதுகுறித்த பகுதி விவசாயி கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாகவே தக்காளிக்கு போதிய விலை கிடைக்கவில்லை.

உழவு கூலி, நடவு கூலி, பூச்சி மருந்து உள்ளிட்ட செலவுகளை கணக்கு பார்த்தால், தக்காளி விற்கும் விலைக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. தக்காளியை பறிக்கும் கூலி ஆட்களுக்கு கூட பணம் கொடுக்க முடியவில்லை. எனவே அரசு ஒவ்வொரு வட்டாரத்திலும் தக்காளிகளை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்கு அமைத்து கொடுக்க வேண்டும்’ என்றனர்.

The post விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தி புதுச்சத்திரம், எருமப்பட்டி வட்டாரத்தில் சாலையோரம் கொட்டப்படும் தக்காளி appeared first on Dinakaran.

Related Stories: