ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் யானை, புலி, சிறுத்தை, கரடி மற்றும் காட்டு மாடுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவைகள், விவசாய நிலங்கள் மற்றும் மக்கள் வாழும் பகுதிக்குள் வரும் நிலையில், அடிக்கடி மனித-விலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது.
மேலும், இவை தற்போது கேரட் கழுவும் இடங்களில் வீணாகும் கேரட்டை சாப்பிடுவதற்காக கூட்டம் கூட்டமாக வரத்துவங்கியுள்ளன. குறிப்பாக, ஊட்டி அருகே கேத்தி பகுதியில் ஏராளமான கேரட் கழுவும் இயந்திரங்கள் உள்ளன. இந்த கேரட் கழுவும் இயந்திரங்களில் விணாகும் கேரட்டுகள் ஓடைகளில் கொட்டப்படுகிறது.
இந்த கேரட்டை சுவைப்பதற்காக தற்போது இப்பகுதிக்கு கூட்டம் கூட்டமாக நாள்தோறும் காட்டு மாடுகள் வருகின்றன. இவைகள் கூட்டமாக பகல் நேரங்களிலேயே வருவதால், மனித-விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அதிகள் வாழும் பகுதிக்குள் வருவதால், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். எனவே, ஓடைகளில் கேரட்டுகளை கொட்டாமல் இருக்கவும், அதேசமயம், மக்கள் வாழும் பகுதிக்குள் காட்டு மாடுகள் வருவதை தடுக்கவும் வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post கேத்தி பகுதியில் கேரட்டை சுவைக்க கூட்டம் கூட்டமாக வரும் காட்டு மாடுகள் appeared first on Dinakaran.