வேதாரண்யம் : வேதாரண்யத்தில் மக்கள் நடமாடும் வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை படிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம் பிரதான வீதிகளில் மாடுகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. வேதாரண்யம் தேரோடும் நான்கு வீதிகளிலும் தற்போது 50க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றி திரிகின்றன. காய்கறி கடை, மளிகை கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் மாடுகள் புகுந்து பொருட்களை தின்று நாசப்படுத்துகிறது.
மாடுகள் கடை வீதியில் நிற்பதால் போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறு ஏற்படுகிறது. மேலும் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் மாடுகள் அங்கும் இங்கும் ஒடிவருவதால் விபத்துகள் நாள்தோறும் நடைபெறுகிறது. நேற்று பிரதான வடக்கு வீதியில் இரு காளைகள் நீண்ட நேரம் சண்டை போட்டு கொண்டிருந்தன. அப்போது, சாலை ஓர பைக்குகள் மீது மோதி கீழே விழுந்து சேதமடைந்தன.
மாடுகளை சாலைகளில் அலையவிடக் கூடாது என நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிவிப்பு விட்டிருந்த நிலையில், அதனை உரிமையாளர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே கடை வீதிகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வர்த்தகர்களும் கேரிக்கை விடுத்துள்ளனர்.
The post வேதாரண்யம் கடைவீதியில் சுற்றித்திரியும் மாடுகள் appeared first on Dinakaran.