மதச்சார்பின்மைக்கு எதிராக அதிமுக திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் ஏற்படுத்த முடியாது: திருமாவளவன் திட்டவட்டம்

திருச்சி: மதச்சார்பின்மைக்கு எதிராக அதிமுக உள்ளது. திமுக கூட்டணியில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்த முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: ஜூன் 14ம் தேதி (இன்று) மாலை 4 மணி அளவில் திருச்சி அண்ணா ஸ்டேடியம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மதசார்பின்மை காப்போம் பேரணி நடக்கிறது.

அகில இந்திய அளவில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு கோட்பாட்டை காக்க வேண்டும் என்று அறைகூவல் விடுவதற்கான பேரணி இது. சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை ஒன்றிய பாஜ அரசு கையாளுகிறது. இந்தியாவில் பிற மாநிலங்களில் ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனதா, சங்பரிவார் அமைப்புகள் மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியலை பரப்பி இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து வருகின்றனர்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துவதற்காக முருகவேல் யாத்திரை, முருக பக்தர்கள் மாநாடு என்று செயல்படுத்துகின்றனர். பாஜவும் அதன் கூட்டணி கட்சிகளும் அதிமுக உட்பட மதச்சார்பின்மைக்கு எதிராகவே நிற்கின்றன. இந்தச்சூழலில் மதச்சார்பின்மையை காப்போம் என பேரணிக்கு நாங்கள் அழைக்கிறோம். நிபந்தனை அரசியலை கூட்டணிக்குள் செய்யக்கூடாது. எதிர்பார்ப்பு என்பது எல்லா தேர்தலிலும் உள்ளது. கூட்டணியின் நலம் முதன்மையானது. திமுகவுக்கு எப்படி கூட்டணி பொறுப்புள்ளதோ அதே போல கூட்டணி கட்சிகளுக்கும் பொறுப்பு உள்ளது.

கூட்டணி ஆட்சி என்பதை நெடுங்காலத்திற்கு முன்பே நிலைப்பாடாகக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கும் அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதற்கான காலம் இது இல்லை. மாயத் தோற்றத்தை ஏற்படுத்த பார்க்கின்றார்கள். திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்படுத்த முடியாது. அதிமுக கூட்டணியில் உள்ளவர்களையே அவர்கள் இணைக்கவில்லை. அமைச்சர் அமித்ஷா கூட்டணிக்காக இரண்டாவது முறை வந்துவிட்டார். இருந்தும் கூட்டணி தயாராக இல்லை. அதிமுக கூட்டணி இன்னும் வடிவம் பெறவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post மதச்சார்பின்மைக்கு எதிராக அதிமுக திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் ஏற்படுத்த முடியாது: திருமாவளவன் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: