முருகர் மாநாடுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி மத நிகழ்வில் அரசியல் கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மத நிகழ்வுகளில் அரசியல் கலக்க கூடாது என்று கூறி, முருக பக்தர்கள் மாநாட்டை நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி அளித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை பாண்டிகோவில் அருகில் உள்ள திடலில், இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்களின் மாநாடு வரும் ஜூன் 22ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த வளாகத்திற்குள் முருகனின் அறுபடை வீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைக்கப்பட உள்ளது. இதில் பூஜைகள், நிகழ்ச்சிகள் நடத்தி மாநாடு நடத்தப்படுகிறது. இதற்கு அனுமதி வழங்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யயப்பட்டது.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மாநாட்டுக்கான முன்னேற்பாடுகளை செய்யலாம். ஆனால் எவ்வித பூஜைகளும் செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் சார்பில் தாக்கல் செய்த இடையீட்டு மனுவில், ‘‘அறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைத்து, பூஜை செய்ய அனுமதிப்பது, கோடிக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கையை அவமதிப்பதாகும். ஆன்மீகத்தை, அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது. கடவுளை கட்சிக்குப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘‘முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது. இவற்றில் முன்கூட்டியே மேற்கொள்ளும் ஏற்பாடுகளை நிறைவேற்றி ஜூன் 18க்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது‌’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘முருக பக்தர்கள் மாநாட்டிற்கு முன்னதாக அறுபடை வீடு மாதிரி அமைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் மத நிகழ்வுகளில் அரசியல் கலக்க கூடாது என்பதை மனதில் கொண்டு நிகழ்வுகளை நிபந்தனைகளுடன் நடத்த வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

The post முருகர் மாநாடுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி மத நிகழ்வில் அரசியல் கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: