குளித்தலை : மாயனூரில் இருந்து தாயனூர் வரை இனுங்கூர் வழியாக செல்லும் பழைய கட்டளை மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் நடுகரையில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ரூ.44.85 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ மாணிக்கம் தொடங்கி வைத்தார்.
கரூர் மாவட்டம், மாயனூரில் இருந்து மகாதானபுரம், மகிளிப்பட்டி, பில்லாபாளையம், வீரக்குமாரப்பட்டி, சீக்கம்பட்டி, மேல குட்டப்பட்டி, வை.புதூர், கணக்கபிள்ளையூர், மேலப்பட்டி, பணிக்கம்பட்டி, நடுப்பட்டி பாலம், கணேசபுரம், பொய்யாமணி, இனுங்கூர், சுக்காம்பட்டி, இனுங்கூர் எல்லையம்மன் கோவில் வழியாக நச்சலூர் சென்று தாயனூர் வரை இந்த கட்டளை மேட்டு வாய்க்கால் செல்கிறது. இதனால் வாய்க்கால் தண்ணீரை நம்பி பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல், வாழை, கோரை பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இனுங்கூரில் புதிய மற்றும் பழைய கட்டளை மேட்டு வாய்க்கால் செல்கிறது. இதில் எல்லைஅம்மன் கோவில் வழியாக நச்சலூர் வரை நடு கரையில் செல்லும் சாலை பல ஆண்டுகளாக சீர் செய்ய முடியாத சூழ்நிலையில் இருந்து வந்ததால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.
மேலும் விவசாய இடுபொருள்களை எடுத்து செல்வதற்கு மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் நடுகரையில் செல்லும் வழியில் மிகவும் பழமை வாய்ந்த எல்லையம்மன் கோவில் குடிப்பாட்டுக்காரர்களால் புதுப்பிக்க முடிவு செய்து ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று முடிவும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில் வருகிற ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற இருப்பதால், கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் இருந்தும் சுற்று வட்டார பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
எனவே இனுங்கூரிலிருந்து நச்சலூர் வரை செல்லும் புதிய மற்றும் பழைய கட்டளை மேட்டுவாய்க்கால் நடுகரையில் பொதுமக்கள் விவசாயிகள் பக்தர்கள் பயன்பெறும் வகையில் தார்சாலை அமைத்து தர வேண்டுமென எம்எல்ஏ மாணிக்கத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்கள், விவசாயிகள் எல்லையம்மன் கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் கோரிக்கையை ஏற்ற எம்எல்ஏ மாணிக்கம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 44 லட்சத்து 85 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு சாலை பணிகள் தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு தார்சாலை பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் தியாகராஜன், முன்னாள் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேன்மொழி, வளையப்பட்டி ஜெயராமன் மற்றும் ஊர் பொதுமக்கள் நிர்வாகிகள், கோயில் குடிப்பாட்டுக்காரர்கள் ஏராளமானனோர். கலந்து கொண்டனர்.
The post கட்டளைவாய்க்கால் நடுகரையில் ரூ.44.85 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணி appeared first on Dinakaran.