ஊட்டி : ஊட்டியில் உள்ள வுட்அவுஸ் பண்ணை, ஆவின் வளாகத்தில் ரூ.13 கோடியில் அமைக்கப்பட உள்ள சீஸ் பிளாண்ட் பணிகள் ஆகியவற்றை சட்டமன்ற பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழுவினர் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழுவின் தலைவர் லட்சுமணன் மற்றும் உறுப்பினர்கள் தேவராஜ், பாண்டியன், வில்வநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் நீலகிரி மாவட்டத்தில் சுற்று பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளின் ஆண்டறிக்கைகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் ஊட்டி தமிழகம் ஆய்வு மாளிகையில் நடந்தது.
கூட்டத்தில் குழுவின் தலைவர் லட்சுமணன் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற ஏடுகள் குழு ஆய்வு பயணம் மேற்கொண்டது. சிங்காரா பகுதியில் நடைபெற்று வரும் நீர்மின் திட்ட பணிகளை குழு ஆய்வு செய்ததில் அங்கு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் மாயார் நீர் மின் திட்ட பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகம், தெப்பகாடு யானைகள் முகாமை ஆய்வு செய்தோம். இங்கு யானை பாகன்களும், அவர்களது குடும்பமும் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக முதல்முறையாக யானை பாகன்களுக்கு 44 குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. யானை பாகன்களுக்கு என தரமான குடியிருப்புகளை கட்டி கொடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து, எரிசக்தித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஆண்டு அறிக்கை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஆண்டறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் கட்டுபாட்டில் உள்ள வுட் ஹவுஸ் பண்ணையை குழு உறுப்பினர்கள் நேற்று பார்வையிட்டு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.
ஆவின் பாலகத்தில் சுமார் ரூ.13 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள சீஸ் பிளேண்ட் தொடர்பான பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைவாக முடித்து உற்பத்தியை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.
இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தமிழ்நாடு மின் பகிர்மான கழக தலைமை நிதிக்கட்டுபாட்டு அலுவலர் சவிதா, குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் மோகன்தாஸ், ஆவின் பொது மேலாளர் ஜெயராமன், நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர், ஊராட்சிகள் உதவி இயக்குநர் சரவணன், நீலகிரி மின் பகிர்மான வட்ட கணக்கு மேற்பார்வையாளர் பெலிக்ஸ் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post ஊட்டியில் வுட்அவுஸ் பண்ணையில் சட்டமன்ற பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழுவினர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.