தவெக பொதுச்செயலாளர் நடத்திய கூட்டத்தில் விஜய் படத்தை தூக்கி வீசி காலால் மிதித்த நிர்வாகிகள்

செஞ்சி: தவெக பொதுச்செயலாளர் நடத்திய கூட்டத்தில் விஜய் படத்தை தூக்கி வீசி காலால் மிதித்த நிர்வாகிகளால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் வடமேற்கு மாவட்ட தவெக சார்பில் கொள்கை விளக்க பொது கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செஞ்சியில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

அப்போது மேல்மலையனூர் ஒன்றிய துணை செயலாளர் சரண்ராஜ் நிர்வாகிகளுடன் கூட்ட மேடை அருகே வந்து தங்களுக்கு மரியாதை தராத மாவட்ட செயலாளரை கண்டித்து அவர் அணிந்திருந்த கட்சித் துண்டையும், விஜய் படத்தினுடைய அட்டையையும் தூக்கி எறிந்தார். அவரது ஆதரவாளர்கள் விஜய் படத்தை காலால் மிதித்து போராட்டம் நடத்தினர்.  அப்போது நிர்வாகி சரண்ராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், 10 ஆண்டாக உழைத்தோம்.

இப்ப வந்தவருக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுத்து உள்ளீர்கள். ஆனால் மாவட்ட செயலாளர், அனைவரையும் அரவணைத்து செல்லாமல் தனியாக செயல்படுகிறார் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த பொது செயலாளர் ஆனந்த் பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளியேறினார். நடிகர் விஜய் கட்சியில் ஆரம்பத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகளிடையே பூசல் இருந்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் வருவதற்குள் மாவட்ட அளவில் கோஷ்டி பூசல் அதிகமாகும் என அக்கட்சி நிர்வாகிகள் முணுமுணுத்தபடி கலைந்து சென்றனர்.

The post தவெக பொதுச்செயலாளர் நடத்திய கூட்டத்தில் விஜய் படத்தை தூக்கி வீசி காலால் மிதித்த நிர்வாகிகள் appeared first on Dinakaran.

Related Stories: