திருத்தணி, ஜூன் 13: திருத்தணி, திருவள்ளூரில் நேற்று இரவு கொட்டிய கனமழைக்கு சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர் காற்று வீசியது. மாலையில் திடீர் மழை பெய்தது. தொடர்ந்து இரவு 7 மணி முதல் சுமார் 2 மணி நேரம் இடி மின்னலுடன் கன மழை கொட்டியது. இதனால் பழைய பஜார் தெரு, காந்தி ரோடு, பைபாஸ் சாலை, மேட்டுத் தெரு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக பழைய பஜார் தெருவில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்ததால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பெரும் அவதி அடைந்தனர். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று இரவு கனமழைக்கு குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதேபோல் திருவள்ளூர் பகுதியிலும் நேற்று மாலை கனமழை கொட்டி தீர்த்தது. காலை முதல் இதமான வெயில் இருந்த நிலையில் மாலையில் மேகமூட்டத்துடன் சுமார் அரை மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதில் திருவள்ளூர் பஜார் பகுதியில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியது.
The post திருத்தணி, திருவள்ளூரில் கொட்டி தீர்த்த கனமழை appeared first on Dinakaran.