இதனால் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் விரக்தியடைந்தனர். இதனிடையே கடந்த 5ம்தேதி அன்புமணி தைலாபுரம் வந்தார். தொடர்ந்து ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் ராமதாசை சந்தித்து 3 மணி நேரம் பேசினர். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும் பாமக உள்கட்சி பூசல், தேர்தல் கூட்டணி உள்ளிட்டவை தொடர்பாக அவர்கள் பேசியிருக்கலாம் என தகவல் வெளியானது. இதனிடையே 7ம்தேதி சென்னை சென்ற பாமக நிறுவனர் ராமதாஸ், ஆடிட்டர் குருமூர்த்தியை மீண்டும் சந்தித்து பேசினார்.
அதேபோல் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்த பரசுராமன் முகுந்தனும் சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்குபின் கட்சியிலும், தேர்தலிலும் பாமகவின் நிலைப்பாடு தொடர்பாக சில முக்கிய முடிவுகளை ராமதாஸ் எடுத்து விட்டதாக தகவல் வெளியாகி வருகின்றன. வருகிற சட்டசபை தேர்தலில் பாஜ- அதிமுக கூட்டணியில் பாமகவையும் சேர்த்து அதிகளவில் மற்றும் அக்கட்சி விரும்புகின்ற தொகுதிகளை ஒதுக்கி தருவது, கூட்டணி ஆட்சியில் பங்கு அளிப்பது, ராஜ்யசபா சீட் உள்ளிட்ட சில வாக்குறுதிகள் ராமதாசுக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிகின்றன.
இதனால் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்தபின் சில முக்கிய அறிவிப்புகளை வருகிற 12ம் தேதி ராமதாஸ் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி நிர்வாகிகளிடம், தொண்டர்களிடம் எழுந்துள்ளது. அதேவேளையில் அன்புமணி நிர்வாகிகள் சந்திப்பை தவிர்த்து அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதனிடையே கட்சியின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் மாற்றம், நீக்கம் தொடர்பாக கடந்த சில தினங்களாக எந்தவித நடவடிக்கையையும் ராமதாஸ் மேற்கொள்ளாத நிலையில், அடுத்தடுத்து மாற்றங்கள், நியமனங்கள் தொடர்பான அறிவிப்புகளும் வரலாம் என தெரிகிறது.
ஒன்றிய அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் மதுரை வந்து சென்று திரும்பியுள்ள நிலையில் மீண்டும் விரைவில் தமிழகம் வருவேன் என கூறிவிட்டு சென்றுள்ளதால் அதற்குள் பாமக மற்றும் சில கட்சிகளையும் முழுமையாக கூட்டணிக்குள் அங்கமாக்கி விடுவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாமக உள்கட்சி மற்றும் கூட்டணி விவகாரத்தில் பாஜகவின் திரைமறைவு குறுக்கீடுகளால் நடைபெறும் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை பாமகவினர் மட்டுமின்றி தமிழக அரசியல் வட்டாரங்களும் உன்னிப்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.
The post உள்கட்சி, கூட்டணி விஷயத்தில் பாஜ திரைமறைவு குறுக்கீடு பாமகவில் மீண்டும் ராமதாஸ் கை ஓங்கியது: 12ம் தேதி முக்கிய முடிவை அறிவிக்கிறார்; அப்செட்டில் செயல்தலைவர் அன்புமணி appeared first on Dinakaran.