மங்கலம்பேட்டை: விருத்தாசலம் அருகேயுள்ள நறுமணம் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லக்கூடிய சுமார் ஒரு கிலோமீட்டர் அளவிலான தார் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்டது. இச்சாலையானது தற்போது குண்டும், குழியுமாகவும், ஜல்லி கற்கள் முற்றிலுமாக பெயர்ந்தும், போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக்கற்களில் தடுமாறி, கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகி தள்ளிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலை நீடிப்பதாகவும், இதனால் இப்பகுதி மக்கள் போக்குவரத்துக்கு மிகவும் சிரமப்படுவதாகவும் கூறுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் சாலை செப்பனிடப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே இச்சாலையை உடனடியாக புதிதாக அமைத்து தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நறுமணம் கிராமத்தில் தார் சாலை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.