சோழிங்கநல்லூர், ஜூலை 20: பெரும்பாக்கம் பகுதியில் நேற்று அதிகாலை 6 மணிக்கு, பொதுமக்கள் நடைபயிற்சி சென்றபோது, அங்குள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் முகம் சிதைக்கப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆனால், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இறந்து கிடந்தவர் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மொபட்டை பறிமுதல் செய்து, அதன் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது, பெரும்பாக்கம், எழில் நகர், 105வது பிளாக், 2வது மாடியில் வசித்த பழனிசாமி (36) என தெரியவந்தது. இவர், ராஜிவ்காந்தி சாலையில் உள்ள காஸ் ஏஜென்சியில் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்ததும் தெரிந்தது. திருமணமான இவர், மனைவி வீரலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில வாரங்களுக்கு முன் வீரலட்சுமி, கணவனுடன் வாழ விருப்பமில்லை, என கண்ணகி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பழனிசாமி தனது கையால் வீரலட்சுமியை முகத்தில் தாக்கி உள்ளார். இதில் அவரது முகத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டு பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று நள்ளிரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது பழனிசாமி போதையில் வீட்டில் தூங்கி இருந்துள்ளார். சத்தம் கேட்டு எழுந்த பழனிசாமி நள்ளிரவு 1.30 மணிக்கு தனது மொபட்டை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் சென்ற நிலையில், அருகே உள்ள பேருந்து நிறுத்ததில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரது மனைவி வீரலட்சுமி, உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post காஸ் சிலிண்டர் டெலிவரி ஊழியர் வெட்டிக்கொலை: மனைவியிடம் தீவிர விசாரணை appeared first on Dinakaran.
