செங்கல்பட்டு, ஜூலை 22: செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டியில் செயல்பட்டு வரும் பிஎம்டபிள்யூ கார் தொழிற்சாலையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இத்தொழிற்சாலையில் உயர்ரக கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தொழிற்சாலையில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஊதிய உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக சுமூகமாக பேசித் தீர்க்க வலியுறுத்தி தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு தலையிட்டு உடனடியாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை சுமூகமாக பேசி தீர்க்க வேண்டும். பிஎம்டபிள்யூ கார் தொழிற்சாலையின் தொழிலாளர் விரோதமாக செயல்படுவதன் புகாரின் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்திட வேண்டும், நேரடி உற்பத்தி மற்றும் நிரந்தர தன்மையுள்ள பணிகளில் ஈடுபட்டு வரும் அனைத்து தொழில் பழகுணர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். 20 நிமிடங்கள் தேநீர் இடைவேளை நேரத்தை வேலை நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவியல் பூர்வ உற்பத்தி இலக்குகளை நிர்ணயம் செய்ய தேசிய உற்பத்தி ஆணையத்துக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎம்டபிள்யூ இந்தியா ஸ்டாப் அண்ட் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் மகேந்திரா சிட்டி அருகில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சங்கத்தின் கௌரவத் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெயஅகஸ்பிரபு வரவேற்றார், போராட்டத்தை துவக்கி வைத்து சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் கண்ணன், பேசினார் போராட்டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் பாரதி அண்ணா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் சங்கர், சிஐடியு மாவட்ட மாவட்ட செயலாளர் பகத்சிங் தாஸ் உள்ளிட்ட பலர் பேசினர். உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் பேசினார். சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் நன்றி கூறினார்.
The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கார் தொழிற்சாலை தொழிலாளர்கள் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.
