காஞ்சிபுரம் மாநகராட்சியில் ரூ.4.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஜவஹர்லால் நேரு மார்க்கெட் திறப்பு: மேயர், எம்எல்ஏக்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம், ஜூலை 20: காஞ்சிபுரம் மாநகராட்சியில் ரூ.4.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஜவஹர்லால் நேரு மார்க்கெட் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதில் மேயர் மகாலட்சுமி யுவராஜ, எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன் ஆகியோர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய காஞ்சிபுரம், செங்கழுநீரோடை வீதி பகுதியில் கடந்த 1912ம் ஆண்டு முதல் ஆங்கிலேயர்களால் காய்கறி மார்க்கெட் துவக்கப்பட்டு, பின்னர் ஜவஹர்லால் நேரு மார்க்கெட் என அழைக்கப்பட்டது. இதில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த வியாபார்கள் காய்கறி விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மார்க்கெட் வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகளான நிலையில், கட்டிடம் அதன் உறுதித்தன்மை இழந்து சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து, ஜவஹர்லால் நேரு மார்க்கெட் வளாகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும், என்று வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கைவிடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.4.60 கோடி மதிப்பில் 80 கடைகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கான பணிகளை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த மே மாதம் 29ம்தேதி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதனையடுத்து, மார்க்கெட் வளாகத்திற்கான புதிய கட்டிடம் கட்டும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தால் கடை வாடகைகள் நிர்ணயிக்கப்பட்டு, வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து காய்கறிகள், மளிகை சாமான்கள், விற்பனை செய்ய தனிக்கடைகளும், அசைவ உணவுப் பொருட்களை விற்பனை செய்ய தனி கடைகளும் என 80 கடைகளுடன் செயல்பட உள்ள ஜவஹர்லால் நேரு மார்க்கெட்டை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று நடந்தது.

இதில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் கலந்துகொண்டு ஜவஹர்லால் நேரு மார்க்கெட் வளாகத்தை பொதுமக்கள், வியாபாரிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர்.அப்போது, மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் தேவராஜ், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் விஜயராகவன், கவுரவ தலைவர் சிகாமணி மற்றும் நிர்வாகிகள் சண்முகம், முருகன், மாதவன், வாசுதேவன், ரிஸ்வான், மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளை பெற்றுக்கொண்டு காய்கறி வியாபாரத்தை மகிழ்ச்சியுடன் தொடங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post காஞ்சிபுரம் மாநகராட்சியில் ரூ.4.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஜவஹர்லால் நேரு மார்க்கெட் திறப்பு: மேயர், எம்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: