தவெக இன்னொரு பாஜ: திமுகவில் இணைந்த இன்ஸ்டா பிரபலம் விளாசல்

கோவை: பாஜவின் மற்றொரு வடிவம் தான் தவெக என திமுகவில் இணைந்த கோவையை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி கூறினார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பிரபலமாக உள்ள இவர், நடிகர் விஜய்யின் தவெகவில் உறுப்பினராக இருந்து வந்தார்.

இந்நிலையில், பெண் என்பதால் கட்சி நிர்வாகிகள் தன்னை புறக்கணிப்பதாகவும், கட்சியில் உள்ள நிர்வாகிகள் தன்னை வளரவிடாமல் தடுத்து வருவதாகவும் புகார் கூறிய வைஷ்ணவி, கடந்த 3ம் தேதி தவெகவில் இருந்து விலகினார். அவருக்கு பாஜவில் சேர அக்கட்சி எம்எல்ஏ வானதி சீனிவாசன் அழைப்பு விடுத்தார். இந்நிலையில், வைஷ்ணவி தனது ஆதரவாளர்களுடன் திமுக மேற்கு மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் கோவையில் நேற்று திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

பின்னர் வைஷ்ணவி கூறியதாவது: தவெகவில் ஒரு வருட காலமாக பயணித்து வந்தேன். தவெக இளைஞர்களுக்கான அரசியலை முன்னெடுத்து செல்வார்கள் என்று கருதி நிறைய இளைஞர்கள் அக்கட்சியில் இணைந்தனர். ஆனால், கடைசியில் அதிருப்தி தான் மிஞ்சியது. எனவே, அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளேன்.

தவெகவை பொருத்தவரை பாஜவின் மற்றொரு வடிவம் என்பது தான் உண்மை. எனவே, அதில் இருந்து விலகி திமுகவில் இணைந்து அதன் மூலமாக என்னுடைய மக்கள் நலப்பணிகள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தவெக இன்னொரு பாஜ: திமுகவில் இணைந்த இன்ஸ்டா பிரபலம் விளாசல் appeared first on Dinakaran.

Related Stories: