ஐ.நா: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பு மற்றும் இதனால் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப்போர் எதிரொலியாக, நடப்பு 2025ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாகக் குறையும் என, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2025ம் ஆண்டு மத்தியில் உலக பொருளாதார நிலையும் வாய்ப்புகளும் என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை ஐநா வெளியிட்டுள்ளது. இதில், கூறியிருப்பதாவது: வேகமான பொருளாதார வளர்ச்சி நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. மக்களின் நுகர்வு மற்றும் முதலீடுகளும் அதிகரித்து வருவதே இதற்குக் காரணம். இருப்பினும், நடப்பு 2025ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக குறையும். கடந்த ஆண்டு, இந்திய பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.
சர்வதேச அளவிலான வர்த்தகப்போர், அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழ்நிலைதான் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட இதற்கு காரணம். பிற நாடுகளின் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பால் உற்பத்திச் செலவு அதிகரித்து, பொருட்கள் சப்ளையும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே நுகர்வு அதிகரிப்பு, முதலீடு மட்டுமின்றி, சேவை துறைகளின் ஏற்றுமதி இந்திய பொருளாதார வளர்ச்சி ஏற்றம் பெற உதவும். அமெரிக்க வரி விதிப்பை பொறுத்தவரை, மருந்து, எலெக்ட்ரானிக்ஸ், செமி கண்டக்டர்கள் போன்றவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கு, பொருளாதாரத்தின் மீதான பாதிப்பைக் குறைக்கும். இருப்பினும், இந்த விலக்கினை நிரந்தரமானதாக கருத முடியாது.இதுபோல், கடந்த ஆண்டில் 4.9 சதவீதமாக இருந்த பண வீக்கம், இந்த ஆண்டு 4.3 சதவீதமாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 2.4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய ஆண்டு கணிக்கப்பட்ட 2.9 சதவீதத்தை விட குறைவு. மேலும் கடந்த ஜனவரியில் கணிக்கப்பட்டதை விட 0.4 சதவீதம் குறைவு. அடுத்த ஆண்டு வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும். சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் நடப்பு ஆண்டில் 4.6 சதவீதமாக குறையும். இதுபோல், வளரும் நாடுகளான பிரேசில், மெக்சிகோ மற்றும் தென்னாப்ரிக்கா நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் வர்த்தக மந்த நிலை, முதலீடுகளில் தொய்வு போன்வற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் நடப்பு ஆண்டில் ஐநா உலக பொருளாதார நிலை மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.
The post டிரம்ப் வரி விதிப்பு காரணமாக இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக குறையும்: ஐநா கணிப்பு appeared first on Dinakaran.