எங்கள் உயிர்வாழ்விற்காக ஈரானிய அச்சுறுத்தலை முறியடிக்கும் போராட்டம்: ஈரான் மீது தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சு!

எருசலேம்: ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மையப் பகுதி மீது வான்வழித் தாக்குதல் நடத்தினோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில், மத்திய ஈரானில் யூரேனியம் இருப்பு வைக்கப்பட்டுள்ள தளம் மீது இஸ்ரேல் பல முறை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனால் தெஹ்ரானில் பயங்கர வெடி சத்தம் கேட்டதுடன் அந்நகரம் புகை மண்டலமானது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த வான்வழி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி முகமது பகேரி மற்றும் ஈரான் துணை ராணுவப் படை தலைவர் ஹூசைன் சலாமி உயிரிழந்தனர்.

ஈரானின் இதயப் பகுதியை தாக்கினோம்: நெதன்யாகு
ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மையப் பகுதி மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது; ஈரானில் Operation Rising Lion என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. இஸ்ரேலின் உயிர்வாழ்விற்காக ஈரானிய அச்சுறுத்தலை முறியடிக்க, ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தலை நீக்க, இந்த தாக்குதல் நடவடிக்கை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும். எங்கள் துணிச்சலான விமானிகள் ஈரான் முழுவதும் உள்ள இலக்குகளை தாக்குகின்றனர் என்றார்.

இஸ்ரேல் தாக்குதல்: அமெரிக்காவுக்கு தொடர்பில்லை
ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரான் மீது தாக்குதலை தொடர்ந்துள்ள இஸ்ரேல் தங்கள் நாட்டில் உள்ள விமானப் படை தளங்களை மூடியுள்ளது. பாதுகாப்பு கருதி ஈராக் தனது வான்பாதையை மூடியது; அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்தது.

ஈரானில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இரு நாட்டுக்கான இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பாக இருக்கவும் தேவையற்ற நடமாட்டத்தை தவிர்க்கவும் இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசர நிலையை அறிவித்த இஸ்ரேல்
ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேல் அரசு அவசர நிலையை அறிவித்துள்ளது.

The post எங்கள் உயிர்வாழ்விற்காக ஈரானிய அச்சுறுத்தலை முறியடிக்கும் போராட்டம்: ஈரான் மீது தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சு! appeared first on Dinakaran.

Related Stories: