காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த முதலையால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலப்பன்(39).
இவர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, நள்ளிரவு 2 மணியளவில் தொடர்ந்து நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டு எழுந்து சென்று பார்த்தார். அப்போது சுமார் 100 கிலோ எடை கொண்ட ராட்சத முதலை ஒன்று வீட்டின் வராண்டாவில் உலா வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணனுக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு வந்த பொதுமக்கள் முதலையை லாவகமாக பிடித்து கயிறு மூலம் கட்டி இரவு முழுவதும் பாதுகாத்தனர்.
பின்னர் நேற்று காலை சிதம்பரம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், வனவர் பன்னீர்செல்வம், வன காப்பாளர் ஞானசேகரன், வனத்துறை அலுவலர் ஸ்டாலின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த முதலையை மீட்டு சிதம்பரம் அருகே வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
The post காட்டுமன்னார்கோவில் அருகே பரபரப்பு நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த ராட்சத முதலை appeared first on Dinakaran.