சேலம், மே 11: கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பு வாகனங்களின் தரங்கள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் சேலத்தில் 36 பள்ளிகளுக்கு சொந்தமான 269 வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மெட்ரிக், சிபிஎஸ்இ என தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்ல பஸ்கள், வேன்கள் என ஆயிரக்கணக்கில் உள்ளது. சில நேரங்களில் இந்த வாகனங்கள் முறையாக பராமரிக்காமல் விட்டுவிட்டால் அவை விபத்தில் சிக்கிக்கொள்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக பள்ளி பஸ்கள், வேன்கள் விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. இதனால் பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறப்பதற்கு 20 நாட்களுக்கு முன்பு பஸ்கள், வேன்கள் சரியான நிலையில் இருக்கிறதா என்பது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் ஏதாவது காலி மைதானத்தில் அனைத்து பஸ்கள், வேன்கள் நிறுத்தி வைக்கப்படும்.அந்த வாகனத்தில் படிக்கட்டு சரியாக உள்ளதா என்றும், டயருக்கு மேல் உள்ள தகடுகள் சரியான நிலையில் உள்ளதா என்றும் ஆய்வு செய்வர்.மேலும் முதலுதவி பெட்டி, வேககட்டுப்பாடு கருவி பொருத்தம், வாகனத்தின் பர்மிட், தகுதிச்சான்று, டிரைவரின் லைசென்ஸ், கண் பரிசோதனை, விழிப்புணர்வு ஸ்டிக்கர், அவசர வழி, ஜன்னலில் இரும்பு கிரீல் பொருத்தப்பட்டு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து, 2025-26ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஜூன் 2ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு பள்ளி பஸ்கள், வேன்கள் ஆய்வு செய்யும் பணியில் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதன் அடிப்படையில் சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட 36 பள்ளிகளின் 314 வாகனங்கள் உள்ளன. அவற்றில் 269 வாகனங்கள் சேலம் 3 ரோடு ஜவஹர் மில் திடலில் ஆய்வு மேற்கொள்ளும் பணி நடைபெற்றது.
கலெக்டர் பிருந்தா தேவி தலைமையில், மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கோகிலா, மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலையில் வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் முன்பகுதி, பின்பகுதி ஆகியவை சரியாக செயல்படுகிறதா அவசர வழி, பிரேக், கியர், முதலுதவி சிகிச்சை பெட்டி, தகுதி சான்று, பதிவுச்சான்று, இன்சூரன்ஸ், வாகனத்தின் உட்புற கட்டமைப்பு இருக்கையின் உறுதித் தன்மை, தீயணைப்பான் கருவி, வேகக்கட்டுப்பாடு கருவி உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் மேலும் டிரைவர் லைசென்ஸ் உள்ளிட்டவைகளையும் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் 9 வாகனம் சிறு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனை பள்ளியின் நிர்வாகத்திடம் தெரிவித்து ஒரு வாரத்தில் சரி செய்ய அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு கண் பரிசோதனையும், வாகனம் இயக்கும் போது திடீரென ஏற்படும் தீ விபத்தில் ஏற்பட்டால், எவ்வாறு பாதுகாத்து கொள்வது குறித்து செயல்முறை விளக்கத்தை தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் சிவக்குமார் தலைமையில் வீரர்கள் செய்து காட்டினர்.
இது குறித்து மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கோகிலா கூறுகையில், ‘‘ஆண்டு தோறும் பள்ளி வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 269 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் 9 பேருந்துகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு அதனை சரி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளின் அச்சமின்றி பயணிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 336 தனியார் பள்ளிகளில் இயங்கிவரும் 2,173 வாகனங்கள் ஆண்டுதோறும் முழுமையான ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் டிரைவர்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்தின் மட்டுமே வாகனத்தை இயக்கி, விபத்தில்லாத பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளி திறக்கும் வரை இந்த சோதனை நடைபெறும்,’’ என்றார்.
The post 36 பள்ளிக்கு சொந்தமான 269 வாகனங்கள் ஆய்வு appeared first on Dinakaran.