இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து பாக். தாக்குதல் நடத்த முயற்சி செய்ததை இந்தியா வெற்றிகரமாக தடுத்து, பாக்.கின் 9 நகரங்களில் டிரோன் மூலம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த பதற்றமான நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்திய எல்லைகளை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன்கள் அதிரடி தாக்குதல் நடத்தின. இதற்கிடையே காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து பாகிஸ்தான் படைகள் நேரடி தாக்குதலை தொடங்கி உள்ளன. பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதியில் நேற்று அதிகாலை 2 இடங்களில் பாக். படைகள் ஏவிய ஏவுகணைகள் தாக்கின. மேலும் குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களிலும் பாக்.
பீரங்கிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் பூஞ்ச் மாவட்டம் லோரன் மற்றும் மெந்ஹர் செக்டார் பகுதியில் மொகத் அப்ரார் என்ற பெண் பலியானார். 3 பேர் காயம் அடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் உரி செக்டாரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் துருப்புக்களின் கடுமையான தாக்குதலில் மேலும் ஒரு பெண் கொல்லப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல் உரி செக்டாரில் சிலிகோட், போனியார், கமல்கோட், மோஹ்ரா மற்றும் ஜிங்கிள் உள்ளிட்ட பகுதியில் பாக். தாக்குதலில் வீடுகள் சேதம் அடைந்தன.
இதனால் வீடுகளை விட்டு மக்கள் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உரி செக்டரின் கோஹலான் மற்றும் சோட்டாலி, டூர்னா போஸ்ட் ஆகிய இடங்களில் பாகிஸ்தான் துருப்புக்கள் போர்நிறுத்தத்தை மீறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் வீடுகள் மீது பாக். படைகள் கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர்களுக்கு இந்திய படைகள் பதிலடி கொடுத்தனர். இந்த பதற்றமான சூழலில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவத்தின் உயரதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதைத்தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது எல்லையில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுப்பது பற்றி பிரதமர் மோடி, முப்படைத்தளபதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பாக். நடவடிக்கைகளுக்கு உடனுக்குடன் உரிய பதிலடி கொடுக்க அவர் உத்தரவிட்டார். இதனால் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. பாக். தாக்குதல் பற்றி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது.
வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது: இந்திய எல்லையில் வான்வெளியில் பல விதிமீறல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. சர்வதேச எல்லையில் 36 இடங்களில் 300 – 400 டிரோன்களைப் பயன்படுத்தி தாக்க பாகிஸ்தான் முயற்சித்தது. பாகிஸ்தான் பயன்படுத்திய டிரோன்களை இந்தியா தடுத்துள்ளது, சுட்டுவீழ்த்தியுள்ளது. இதன் மிச்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. முதல் கட்ட ஆய்வில் இவை துருக்கியைச் சேர்ந்த டிரோன்கள் எனத் தெரியவந்துள்ளன.
இதற்கு பதில் நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து ஆயுதம் ஏந்திய டிரோன்கள் பாகிஸ்தானின் நான்கு வான்வழி பாதுகாப்பு இடங்களைக் குறிவைத்து அனுப்பப்பட்டன. அதில் ஒரு டிரோன் பாகிஸ்தானில் இலக்கை அழித்தது. இதற்காக இந்தியாவில் தம்தார், உரி, பூஞ்ச், மேந்தர், ராஜௌரி, அக்னூர்,உதாம்பூர் போன்ற இடங்களில் பாகிஸ்தான் படைகள் பீரங்கி தாக்குதலில் ஈடுபட்டது. இதில் சில இழப்புகளும் சிலருக்கு காயங்களும் ஏற்பட்டன. இந்தியாவின் பதில் தாக்குதல்களில் பாகிஸ்தான் ராணுவத்திலும் நிறைய இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஏவுகணைத் தாக்குதலின்போது பாகிஸ்தான் பயணிகள் விமானங்களுக்கு வான்வெளியை மூடவில்லை. பொதுமக்கள் பயணிக்கும் சிவில் விமானங்களை கேடயமாகப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இது பயணிகள் விமானங்களுக்குப் பாதுகாப்பானது இல்லை. இந்திய விமான நிலையங்களை மூடியதால் நம் எல்லையின் எந்த விதமான விமானங்களின் நடமாட்டமும் இல்லை. இந்திய விமானப்படை அதன் பதிலடியில் கணிசமான நிதானத்தைக் காட்டியது, இதனால் சர்வதேச சிவில் விமான நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்தது.
இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல் தோல்வியடைந்த நேரத்தில் கராச்சி மற்றும் லாகூர் இடையேயான விமானப் பாதையில் சிவில் விமானங்கள் பறந்ததற்கான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளன. நாங்கள் இப்போது காட்டிய ஸ்கிரீன்ஷாட், பஞ்சாப் துறையில் உயர் வான் பாதுகாப்பு எச்சரிக்கை சூழ்நிலையின் போது பயன்பாட்டு விமான ரேடார் 24 இன் தரவைக் காட்டுகிறது. நீங்கள் பார்த்தது போல், எங்கள் அறிவிக்கப்பட்ட மூடல் காரணமாக இந்தியப் பக்கத்தில் உள்ள வான்வெளியில் சிவில் விமானப் போக்குவரத்து முற்றிலும் இல்லை.
இருப்பினும், கராச்சிக்கும் லாகூருக்கும் இடையிலான விமானப் பாதையில் பறக்கும் சிவில் விமான நிறுவனங்கள் உள்ளன. நீங்கள் பார்க்கக்கூடிய மற்ற சிவில் விமானங்களில், ப்ளைனாஸ் ஏவியேஷனின் ஏர்பஸ் 320 விமானத்தை நாங்கள் முன்னிலைப்படுத்தியுள்ளோம். இது டம்மமில் இருந்து மாலை5.50 மணிக்கு புறப்பட்டு பின்னர் இரவு 11.10 மணிக்கு லாகூரில் தரையிறங்கியது. இந்திய விமானப்படை அதன் பதிலில் கணிசமான நிதானத்தைக் காட்டியது. இதனால் சர்வதேச சிவில் விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்தது.
ஆனால் அதற்கு மாறாக இந்தியா தனது சொந்த நகரங்களைக் குறிவைத்து பழியை பாகிஸ்தான் மீது போடுவதாக தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது. அதே போல் பாகிஸ்தானின் வழிபாட்டு தலங்களை இந்தியா குறிவைத்ததாகவும் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது. பாகிஸ்தான் குருத்வாரா, கோவில்கள், தேவாலயம் என அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் குறிவைத்து தாக்கியது. தேவாலயம் மீதான பாகிஸ்தானின் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு தெரிவித்தனர்.
* பஞ்சாப் எல்லையில் ரூ. 51 கோடியில் 9 டிரோன் எதிர்ப்பு அமைப்புகள்
எல்லைக்கு அப்பால் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க ரூ.51.41 கோடி செலவில் டிரோன் எதிர்ப்பு அமைப்பை வாங்குவதற்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பாகிஸ்தானுடனான 532 கிலோமீட்டர் எல்லையில் 9 டிரோன் எதிர்ப்பு அமைப்புகள் நிறுவப்படும் என்று முதலமைச்சர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
* முப்படைகளின் மாஜி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
பாகிஸ்தானுடனான மோதல்களுக்கு மத்தியில், பிரதமர் மோடி நேற்று முப்படைகளின் முன்னாள் தலைவர்கள் உட்பட பல முன்னாள் ராணுவ வீரர்களுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முன்னாள் வீரர்களில் ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையின் முன்னாள் தளபதிகள் மற்றும் நாட்டிற்கு சேவை செய்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் அடங்குவர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
* காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மீது பாக். மீண்டும் டிரோன் தாக்குதல்
நேற்று இரவு ஜம்மு நகரை குறிவைத்து பாக். படைகள் தாக்குதல் நடத்தின. தொடர்ந்து மூன்றாம் நாளாக டிரோன்கள் மற்றும் கனரக பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து சைரன் ஒலி எழுப்பப்பட்டது. ஜம்மு மட்டுமல்லாமல் பாக். எல்லையில் உள்ள அத்தனை நகரங்களிலும் மின்தடை செய்யப்பட்டது. இதுபற்றி காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா,’நான் இருக்கும் இடத்திலிருந்து அவ்வப்போது குண்டுவெடிப்பு சத்தங்கள், கனரக பீரங்கித் தாக்குதல்கள் சத்தத்தை கேட்கலாம்.
ஜம்முவில் இப்போது இருள் சூழ்ந்துள்ளது. நகரம் முழுவதும் சைரன்கள் கேட்கின்றன’ என்று பதிவிட்டு, இருள் சூழ்ந்த ஜம்மு நகர் படத்தையும் அவர் வெளியிட்டார். காஷ்மீரின் ஜம்மு மட்டுமல்லாமல் சம்பா, பூஞ்ச், உரி, உதாம்பூர், ரஜோரி மற்றும் பஞ்சாப் மாநிலம் பதன்கோட், அட்டாரி எல்லை, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பகுதியிலும் பாக். டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தின. இதனால் எல்லை பகுதியில் தொடர் குண்டு முழக்கங்கள் கேட்டன. பாக். தாக்குதலுக்கு இந்தியா உரிய பதிலடி கொடுத்தது.
* டிரோன்கள் பறக்க, பட்டாசு வெடிக்க குஜராத் அரசு தடை
குஜராத்தில் மே 15 வரை டிரோன்கள் பறக்கவும் மற்றும் பட்டாசுகளைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தேச விரோத உணர்வுகளைப் பரப்பும் சமூக ஊடக பயனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது. இதற்கான உத்தரவை குஜராத் உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவி வெளியிட்டுள்ளார்.
* பாக்.கிற்கு ரூ. 60 ஆயிரம் கோடி கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள பாகிஸ்தானுக்கு அடுத்தக்கட்டமாக ரூ.60 ஆயிரம் கோடி நிதிஉதவியை சர்வதேச நாணய நிதியம் வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய உள்ள நிலையில் அதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போர் சூழலில் இந்தியா தன்னுடைய பார்வையை ஐ.எம்.எப் முன் வைக்கும் எனத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பாகிஸ்தானுக்கான கடந்த கால கடனுதவிகள் எவ்வளவு வெற்றிகரமாக இருந்துள்ளன என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
* பாக்.அரசு, ராணுவத்தை விமர்சித்த பெண் அதிகாரி கைது
பாகிஸ்தானில் ராணுவம் மற்றும் அரசாங்கத்தை வாட்ஸ்அப் குழுவில் விமர்சித்ததற்காக பெண் அதிகாரி ஹினா ஷேக் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வாட்ஸ்அப் குழுவில் பாகிஸ்தான் ராணுவம் (இந்தியாவுடனான இராணுவ மோதலில் அதன் பங்கிற்காக) மற்றும் பாகிஸ்தான் அரசாங்கம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக தேசிய தரவுத்தள பதிவு ஆணைய அதிகாரி ஹினா ஷேக் மீது வழக்குப் பதிவு செய்து அவரை பாக். அரசு கைது செய்துள்ளது.
* இந்தியாவின் வழிபாட்டுத் தலங்கள் மீது இந்தியாவே தாக்குதல் நடத்தியதா? பாக். குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்ப்பு
இந்தியாவின் வழிபாட்டுத்தலங்கள் மீது நடந்த தாக்குதலுக்கு, இந்திய ஆயுதப் படைகள் மீது பழி சுமத்தும் பாக். குற்றச்சாட்டை உலகை ஏமாற்றவும் தவறாக வழிநடத்தவும் செய்யும் முயற்சிகளின் பிரதிபலிப்பாகும் என்று வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
பூஞ்சில் உள்ள ஒரு குருத்வாராவையும் அமிர்தசரஸில் உள்ள மற்றொரு மதத் தலத்தையும் பாகிஸ்தான் தாக்கிய சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டி கூறுகையில்,’இந்தத் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்பதற்குப் பதிலாக, அமிர்தசரஸ் போன்ற நகரங்களை குறிவைத்து, பழியை பாகிஸ்தான் மீது சுமத்த முயற்சிப்பது இந்திய ஆயுதப் படைகள் மற்றும் இந்திய விமானப்படைதான் என்று பாகிஸ்தான் அபத்தமான மற்றும் மூர்க்கத்தனமான கூற்றை முன்வைத்தது.
இது பாகிஸ்தான் தனது ஆக்கிரமிப்புச் செயல்களை மறுக்க மேற்கொண்ட ஒரு தீவிர முயற்சியைத் தவிர வேறில்லை. ஆனால் உலகை ஏமாற்றி தவறாக வழிநடத்தும் அதன் முயற்சிகளுக்கும் இது உண்மை. அது வெற்றி பெறாது. நாங்கள் எங்கள் சொந்த நகரங்களைத் தாக்குவோம் என்பது பாகிஸ்தான் அரசு மட்டுமே கொண்டு வரக்கூடிய ஒரு வகையான குழப்பமான கற்பனை. ஒருவேளை அவர்கள் அப்படிச் செய்வது, அவர்களின் வரலாறு காட்டும் நடவடிக்கைகளில் நன்கு தேர்ச்சி பெற்றிருப்பதால்தான்.
நங்கனா சாஹிப் குருத்வாராவை டிரோனைப் பயன்படுத்தி குறிவைத்ததாக பாகிஸ்தானின் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய். பாகிஸ்தானின் தவறான தகவல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். பஹல்காம் தாக்குதலில் நாம் கண்டது போல், பாகிஸ்தான் மீண்டும் வகுப்புவாத சாயலை சேர்க்க தீவிரமாக முயற்சிக்கிறது. இது எங்களுக்கு ஆச்சரியமில்லை. இந்தியாவின் உறுதியான ஒற்றுமை பாகிஸ்தானுக்கு ஒரு சவாலாக உள்ளது. தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கர்தார்பூர் சாஹிப் வழித்தடம் இடைநிறுத்தப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
* 28 ஏர்போர்ட்டுகள் மே 15 வரை மூடல்
இந்தியா, பாகிஸ்தான் போர் காரணமாக பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், லடாக், குஜராத், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசத்தில் உள்ள 28 விமான நிலையங்கள் சிவில் சேவைகளுக்காக மூடப்பட்டுள்ளன. தற்போது இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 28 விமான நிலையங்களை மே 15 ஆம் தேதி காலை 5:20 மணி வரை மூடும்படி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுப்படி சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, பூந்தர், கிஷன்கர், பாட்டியாலா, சிம்லா, ஜெய்சல்மார், பதான்கோட், ஜம்மு, பிகானர், லே, போர்பந்தர் மற்றும் பிற நகரங்களில் விமான நிலையங்கள் மே 15 வரை மூடப்படும்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து விமான நிலையங்களிலும் அனைத்துப் பயணிகளுக்கும் இரண்டாம் நிலை சோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும், விமான நிலையங்களில் ஏர் மார்ஷல்கள் நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பயணிகள் இப்போது விமான நிலையத்திற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பே வந்து சேர வேண்டும். செக்-இன் கதவுகள் 75 நிமிடங்களுக்கு முன்பே மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
* எல்லை கிராமங்களை காலி செய்யும் மக்கள்
காஷ்மீரில் ரஜோரி, குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச் ஆகிய எல்லையோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருகிறார்கள். அவர்களுக்கு உள்ளூர் போலீசாரும், ராணுவமும் உரிய பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.
* 4 மாநிலங்களில் கூடுதல் அலர்ட்
காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்கள் கூடுதல் அலர்ட் செய்யப்பட்டுள்ளது. இரவு மின்தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* காஷ்மீர், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாபில் அமைந்துள்ள இந்தியாவின் எல்லையோர மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
* 2025 ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
* நாடு முழுவதும் 28 ஏர்போர்ட்டுகளில் பயணிகள் விமான சேவையை மே 15 வரை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
* 3 எல்லை மாவட்ட மக்கள் பதுங்கு குழிகளுக்கு மாற்றம்
பாகிஸ்தான் படை தாக்குதலை முன்னிட்டு நேற்று இரவு காஷ்மீரின் மூன்று எல்லை மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பாரமுல்லா, குப்வாரா மற்றும் பந்திபோரா மாவட்டங்களில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் வசிக்கும் மக்கள் பதுங்கு குழிகள் மற்றும் பாதுகாப்பான பிற இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானின் குண்டுவீச்சில் 100க்கும் மேற்பட்ட வீடுகள், 24 வணிகக் கட்டிடங்கள் மற்றும் 12 அரசு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ஏவிய 400 டிரோன்கள் அழிப்பு: இந்திய படைகள் துல்லியமாக தாக்கின, முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை appeared first on Dinakaran.