துணை வேந்தர் நியமன விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற தடைக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்ல தமிழக அரசு முடிவு


சென்னை: தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்ல தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு. இந்த சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிரதான மனுவுக்கு பதிலளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டு, இடைக்கால தடை கோரிய மனு மீதான விசாரணையை தள்ளிவைத்திருந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், தமிழக அரசின் சட்டங்களுக்கு தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க அரசுத் தரப்புக்கு அவகாசம் வழங்க வேண்டும். சட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, மொத்தமுள்ள 10 பல்கலைக்கழகங்களில் இரு பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே துணைவேந்தர் தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதுவும், ஜூன் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

அதனால் தடை கோரிய வழக்கில் பதிலளிக்க அரசுத்தரப்புக்கு அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார். தமிழக உயர்கல்வித் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், துணைவேந்தர் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க எந்த அவசியமும் இல்லை. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மனுதாரர், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். தடை கோரிய மனுக்களுக்கு பதிலளிக்க அவகாசம் தராமல் விசாரிப்பது முறையற்றது, நியாயமற்றது, அநீதியானது. வானம் இடிந்து விழுந்து விடாது என கடுமையான ஆட்சேபம் தெரிவித்தார்.

இருப்பினும், மனுதாரர் தரப்பில் இடைக்கால தடை கோரிய மனு மீது வாதங்களை முன் வைக்க நீதிபதிகள் அனுமதியளித்ததை அடுத்து, மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தமிழக அரசு சட்டங்கள், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணானது என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு இடைக் கால தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக மூத்த வக்கீலும் எம்பியுமான வில்சன் தெரிவித்தார். வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, இந்த வழக்கை எடுத்ததே தவறு என்றும் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

The post துணை வேந்தர் நியமன விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற தடைக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்ல தமிழக அரசு முடிவு appeared first on Dinakaran.

Related Stories: