புதிய கட்டுமானம், கட்டிட இடிபாடு பணி மேற்கொள்ளும் போது தடுப்பு அமைக்க தவறினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: புதிய கட்டுமானம் அல்லது கட்டிட இடிபாடுகள் மேற்கொள்ளும் போது கண்டிப்பாக தகரம்/ உலோக தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்றும், மீறினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும், என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.  இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி பகுதிகளில் இந்த முக்கிய விதிமுறைகள் வருகின்ற மே 21ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல்கள்:
1. ஒரு ஏக்கர் வரை பரப்பளவு கொண்ட புதிய கட்டுமானம் அல்லது கட்டிட இடிபாடுகள் மேற்கொள்ளும் போது 6 மீட்டர் உயரமுள்ள தகரம்/ உலோக தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் (அதிக முக்கியத்தும்).
2. ஒரு ஏக்கருக்கு அதிக மான தளப்பரப்பளவு கொண்ட புதிய கட்டுமானம் அல்லது கட்டிட இடிபாடுகள் மேற்கொள்ளும் போது தளத்தை சுற்றி 10 மீ. உயரமுள்ள தகரம்/ உலோக தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். (அதிக முக்கியத்துவம்).
3. புதிய கட்டுமானம் அல்லது இடிக்கப்படும் அனைத்து கட்டமைப்புகளில் இருந்து வெளிவரும் தூசி துகள்கள் பரவுவதை தடுக்க அதிக அடர்த்தி கொண்ட துணி/ தார்ப்பாய்/ இரட்டை அடுக்கு பச்சை வலையால் மூடப்பட்டிருக்க வேண்டும் (அதிக முக்கியத்துவம்).
4. புதிய கட்டுமானம் அல்லது கட்டிட இடிபாடுகளை மேற்கொள்ளும் போது தூசிகள் உருவாகும் பகுதிகளில் தண்ணீர் தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் தெளித்து தூசி உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும். (அதிக முக்கியத்துவம்).
5. அனைத்து கட்டுமான பொருட்களையும், தோண்டப்பட்ட மண் மற்றும் கட்டிட இடிப்பாட்டு கழிவுகளை தளத்தில் அதற்காக ஓதுக்கப்பட்ட இடத்தில் சேமிக்கப்பட வேண்டும், அவை சாலைகள் அல்லது நடைபாதைகளில் கொட்டக்கூடாது மற்றும் அவற்றிலிருந்து காற்றினால் பரவும் தூசிகளை தவிர்க்க குறைந்தபட்சம் 200 ஜிஎஸ்எம் உயர் அடர்த்தி பாலிஎதிலீன் தாள் / தார்பாலினால் மூடப்பட்டிருக்க வேண்டும். (அதிக முக்கியத்துவம்).
6. கட்டுமான தளங்களை அடிக்கடி சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். (நடுத்தர முக்கியத்துவம்).
7. கட்டுமான கழிவு பொருட்களை திறந்த வெளியில் காற்றில் பரவுவதை / கலப்பதை தவிர்க்க முறையாக மூடப்பட்ட லிப்ட் ஷாப்ட்களும் தூசி சேமிப்பானாக பயன்படுத்தப்பட வேண்டும். (அதிக முக்கியத்துவம்)
8. கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகளை மாநகராட்சியின் கட்டுமான மற்றும் இடிபாட்டு கழிவு மேலாண்மை வழிகாட்டுதல்களின்படி பிரிக்கப்பட்டு வாகனங்களில், பெருநகர சென்னை மாநகராட்சியால் உருவாக்கப்பட்ட கட்டுமான மற்றும் இடிபாட்டு கழிவு மேலாண்மை தளங்களுக்கு பிரிக்கப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட வேண்டும். (அதிக முக்கியத்துவம்).
9. கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களும், தூசிகள் பரவுவதை தடுக்க தார்பாலின் மூலம் மூடப்பட்டிருக்க வேண்டும். போக்குவரத்தின் போது தார்பாலின்கள் சரியாக கட்டப்பட்டு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். (அதிக முக்கியத்துவம்).
10. கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகளை கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களின் சக்கரங்களையும் தானாக இயங்கும் இயந்திரம் மூலம் தண்ணீர் கொண்டு கழுவுதல் வேண்டும். (அதிக முக்கியத்துவம்).
11. சிசிடிவி கண்காணிப்பை கட்டிடம் கட்டுபவர் பயன்படுத்த வேண்டும். சிசிடிவி காட்சிகள் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் ஆய்வுக்கு சமர்பிக்க வேண்டும். (அதிக முக்கியத்துவம்).
12. உயரமான கட்டிட திட்ட இடங்களில் (கட்டிட உயரம் 18.5 மீட்டருக்கு மேல்) சென்சார் அடிப்படையிலான காற்று மாசை கண்டறியும் கண்காணிப்பு கருவிகளை பயன்படுத்த வேண்டும். (அதிக முக்கியத்துவம்).
13. தளங்களில் செயல்படும் டீசல் ஜெனரேட்டர் மற்றும் எரிபொருள் கொண்டு இயங்கும் இயந்திரங்கள் சுத்தமான எரிபொருளில் இயங்குதல் வேண்டும். மேலும் அவை சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலைமாற்ற அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி இயக்கப்படுதல் வேண்டும். (அதிக முக்கியத்துவம்).
14. பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் போன்ற கட்டுமானங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்டிப்பாக இருத்தல் வேண்டும் (அதிக முக்கியத்துவம்).
15. கட்டிட இடிபாட்டு கழிவுகளை மற்றும் அதை சார்ந்த கழிவுகளை கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களும் கட்டாயம் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். (அதிக முக்கியத்துவம்).
16. கட்டிடம் கட்டுபவர் தளத்தில் ஒரு தளப் பொறியாளர்/ சுற்றுச்சூழல் பொறியாளர்/ திட்ட மேலாளர் அல்லது நிர்வாக மட்டத்தில் பொருத்தமான தள பணியாளர்களை நியமித்தல் வேண்டும. (நடுத்தர முக்கியத்துவம்).
17. தளத்தில் உள்ள பணியாளர்கள், தொழிலாளர்கள் போன்ற அனைத்து ஊழியர்களுக்கு கட்டிடம் கட்டுபவர் காற்று மாசுவை தவிர்ப்பது பற்றிய புரிதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும் (அதிக முக்கியத்துவம்).
18. தளங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை பாதுகாக்க, சுவாச முகமூடிகள், கண்ணாடிகள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் போன்ற முறையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்க செய்ய வேண்டும். (நடுத்தர முக்கியத்துவம்).

மேலும் விவரங்களுக்கு சென்னை மாநகராட்சியின் இணையதளத்திலும், ”https://chennaicorporation.gov.in/gcc/ Clean_Construction /Clean%20and%20Safe% 20construction%20Guidelines %20Tamil.pdf” மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அபராதம் வகை – 1 (அதிக முக்கியத்தும் வாய்ந்த விதிமீறல்களுக்கு)
சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டுதள்களின் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றாத, 20,000 ச.மீட்டருக்கு அதிகமான பரப்பளவு உள்ள கட்டுமான தளங்களுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதமாக விதிக்கப்படும். 500 ச.மீ.க்கு மேல் 20,000 ச.மீ-. வரை பரப்பளவில் உள்ள கட்டுமான தளங்களுக்கு ரூ.25,000 வரை அபராதமாக விதிக்கப்படும். 300 ச.மீ. முதல் 500 ச.மீ. பரப்பளவில் உள்ள கட்டுமான தளங்களுக்கு ரூ.10,000 வரை அபராதமாக விதிக்கப்படும்.

வகை – 2 (நடுத்தர மற்றும் குறைந்த முக்கியத்தும் வாய்ந்த விதிமீறல்களுக்கு)
சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டுதள்களின் நடுத்தர மற்றும் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றாத, 20,000 ச.மீட்டருக்கு அதிகமான பரப்பளவு உள்ள கட்டுமான தளங்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதமாக விதிக்கப்படும். 500 ச.மீ.க்கு மேல் 20,000 ச.மீ. வரை பரப்பளவில் உள்ள கட்டுமான தளங்களுக்கு ரூ.10,000 வரை அபராதமாக விதிக்கப்படும். 300 ச.மீ. முதல் 500 ச.மீ. பரப்பளவில் உள்ள கட்டுமான தளங்களுக்கு ரூ.1000 வரை அபராதமாக விதிக்கப்படும்.

* 15 நாட்கள் அவகாசம்
நடுத்தர/ குறைந்த முக்கியத்துவம் கொண்ட வழிகாட்டுதல்களில் விதி மீறல்கள் ஏற்பட்டால், மீறல்களை சரிசெய்வதற்கான எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு அதை சரி செய்வதற்கு 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். 15 நாட்களுக்குப் பிறகும் சரிசெய்யாவிட்டால் பரப்பளவிற்கு ஏற்றவாறு அபராதம் விதிக்கப்படும். அதன் பிறகு 7 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும் அதன் பிறகும் சரிசெய்யாவிட்டால் கட்டுமான நடவடிக்கைகள் நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும்.

அதிக முக்கியத்துவம் வாய்ந்த விதிமீறல்கள் சரிசெய்வதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டு அதை சரி செய்வதற்கு 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். 15 நாட்களுக்குப் பிறகும் சரிசெய்யாவிட்டால் பரப்பளவிற்கு ஏற்றவாறு அபராதம் விதிக்கப்படும். அதன் பிறகு 7 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும் அதன் பிறகும் சரிசெய்யாவிட்டால் கட்டுமான நடவடிக்கைகள் நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும்.

The post புதிய கட்டுமானம், கட்டிட இடிபாடு பணி மேற்கொள்ளும் போது தடுப்பு அமைக்க தவறினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: