சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி அபார வெற்றி

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் நேற்று நடந்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி 38 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 18வது தொடரின் 51வது லீக் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடந்தது. அப்போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் அணியின் சுப்மன் கில், சாய் சுதர்சன் துவக்கம் முதல் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

இவர்களின் அநாயாசமான ஆட்டத்தால், பவர் பிளே ஓவர்களின் முடிவில் குஜராத் அணி, விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் குவித்தது. ஜீசன் அன்சாரி வீசிய 7வது ஓவரில், சாய் சுதர்சன் (23 பந்து, 9 பவுண்டரி, 48 ரன்) ஆட்டமிழந்தார். அதையடுத்து, ஜோஸ் பட்லர், கில்லுடன் இணை சேர்ந்தார். இந்த இணை அபாரமாக ஆடி 37 பந்துகளில் 62 ரன்கள் குவித்திருந்த நிலையில், சுப்மன் கில் (38 பந்து, 2 சிக்சர், 10 பவுண்டரி, 76 ரன்) ரன் அவுட்டானார். பின்னர், வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். 13.1 ஓவரில், குஜராத் அணி, 150 ரன்னை எட்டியது. 18வது ஓவரின் கடைசி பந்தில், பட்லர் சிக்சர் அடித்ததன் மூலம், குஜராத், 200 ரன்களை கடந்தது.

இந்நிலையில், கேப்டன் பேட் கம்மின்ஸ் வீசிய 19வது ஓவரில், பட்லர் (37 பந்து, 4 சிக்சர், 3 பவுண்டரி, 64 ரன்) அபிஷேக் சர்மாவிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். பின்னர் ஷாருக்கான், சுந்தருடன் இணை சேர்ந்தார். உனத்கட் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்சர் விளாசிய சுந்தர் (21 ரன்), அடுத்த பந்தில் நிதிஷ் குமார் ரெட்டியிடம் கேட்ச் தந்து அவுட்டானார். அதையடுத்து ராகுல் தெவாதியா களமிறங்கினார். ஓவரின் 3வது பந்தில் சிக்சர் விளாசிய தெவாதியா 5வது பந்தில், அனிகேத் வர்மாவிடம் கேட்ச் தந்து வெளியேறினார்.

கடைசி பந்தில், ரஷித் கான் ரன் எடுக்காமல் உனத்கட்டிடமே கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். அதனால், 20 ஓவர் முடிவில், குஜராத் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன் குவித்தது. ஜெய்தேவ் உனத்கட் 3, பேட் கம்மின்ஸ், அன்சாரி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 225 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக ஆடிய ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா அதிரடியாக அடித்து ஆடி, ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

4.3 ஓவரில் 49 ரன் எடுத்திருந்த நிலையில் ஹெட் 20 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின் வந்த இஷான் கிஷன் 13 ரன்னில் அவுட் ஆனார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த அபிஷேக் 41 பந்துகளில் 74 ரன் எடுத்து வெளியேறினார். சிறிது நேரத்தில் கிளாசன் 23, அனிகேத் வர்மா 3, கமிந்து மென்டிஸ் 0 ரன்னில் வீழ்ந்தனர். 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன் எடுத்தது. அதனால் 38 ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது.

The post சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி அபார வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: