ஒரு கை பார்ப்போம் 234 தொகுதிகளிலும் வெல்வோம்: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மயிலாப்பூர் எம்எல்ஏ மயிலை த.வேலுவின் மகள் அனுஷா, தருண் தன்ராஜ் ஆகியோரது திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடத்தி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: இன்றைக்கு மற்ற மாநிலத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே, உலகத்திற்கே வழிகாட்டக்கூடிய ஒரு சிறப்பான ஆட்சியை நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம்.

தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை நாம் சொல்லியிருக்கிறோமோ அந்த வாக்குறுதிகளை படிப்படியாக இன்றைக்கு எப்படியெல்லாம் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இப்போது சொல்லப்பட்டிருக்கும் அந்த உறுதிமொழிகளும் விரைவாக நிச்சயமாக உறுதியாக நிறைவேற்றப்படும். 2026ம் ஆண்டு 200 அல்ல 220 வரும் என்று இங்கு சொன்னார்கள். அதில் என்ன கஞ்சத்தனம் 234 என்றே சொல்லுங்கள். வந்தாலும் ஆச்சரியமில்லை. ஏனென்றால், செல்லும் இடங்களிலெல்லாம் அந்த வரவேற்பைப் பார்க்கிறேன்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்கின்றபோது 4 முதல் 5 கிலோ மீட்டர் வரை நடந்தே செல்கிறேன். அப்போது, மக்கள் திரண்டு வந்து வரவேற்கும் காட்சியைப் பார்க்கும்போது உள்ளபடியே மெய் சிலிர்த்துப்போகிறேன். நம்மை எதிர்க்கக்கூடியவர்கள் எந்த நிலையில் வந்தாலும் சரி – எப்படிப்பட்ட கூட்டணியை வைத்துக்கொண்டு வந்தாலும் சரி, ஒரு கை பார்ப்போம் என்ற உணர்வோடுதான் நாம் இன்றைக்கு நம்முடைய கடமையை ஆற்றிக்கொண்டிருக்கிறோம். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

அது வருமானவரித் துறையாக இருந்தாலும் சரி அல்லது புலனாய்வுத் துறையாக இருந்தாலும் சரி – சி.பி.ஐ. வைத்து மிரட்டக்கூடியதாக இருந்தாலும் சரி – ஈடி என்ற அந்த துறையாக இருந்தாலும் சரி. கலைஞர் தலைமையில் 5 முறை ஆட்சிக்கு வந்தோம். அதற்குப் பிறகு 6வது முறையாக என்னுடைய தலைமையில் நீங்களெல்லாம் ஆட்சியை உருவாக்கித் தந்திருக்கிறீர்கள். 7வது முறையும் இந்த ஆட்சியை தொடர வைப்பீர்கள் என்ற நம்பிக்கை நிரம்ப உண்டு. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

The post ஒரு கை பார்ப்போம் 234 தொகுதிகளிலும் வெல்வோம்: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: