தேனி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்: பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். தேனி மாவட்டம் முழுவதும் பெரியாறு மற்றும் வைகை ஆறுகளில் இருந்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 27 குடிநீர் திட்டங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்த 27 திட்டங்களுக்கும் சேர்த்து ஆற்றில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர மதுரை மாநகராட்சிக்கு வினாடிக்கு 50 கனஅடி தண்ணீர் வீதம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருவதால், குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக தேனி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவில் குடிநீர் விநியோகம் செய்ய முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் இணைந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குன்னூர் வைகை ஆற்றில் ஆய்வு செய்தனர். அப்போது ஆற்றில் வரக்கூடிய தண்ணீரில் பெரும்பகுதியை மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக எடுக்கப்படுவதால் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை என்றும், இதன் காரணமாக பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

இதன் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் வகையில் தற்காலிகமாக ஆற்றில் செல்லும் தண்ணீரை வாய்க்கால் அமைத்துக் கொள்ளும்படி பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தினர். இந்த ஆய்வின் போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் கருத்த பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் இந்திர கோபால், வைகை அணை உதவி செயற்பொறியாளர் முருகேசன், உத்தமபாளையம் உதவி செயற்பொறியாளர் மயில்வாகனன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post தேனி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்: பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: