கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் நிகழ்வுகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்த மாதத்தில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படக்கூடிய நிகழ்வுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் வீட்டுமனை பட்டா வழங்குதல், பஞ்சமி நிலம், பேருந்துகள் இயக்கம், காவல் மையம் அமைத்தல், இரவு ரோந்து பணி, ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தெரிவிக்கப்பட்ட நேர்வுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விவரம், ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் சட்டம் ஒழுங்கு நேர்வுகளில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் நிகழ்வுகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவும், மேலும் சட்டம் ஒழுங்கு தொடர்பான நிகழ்வுகளில் அமைதியை நிலை நாட்டும் வகையில் தாமதமின்றி உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டமும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுத்தல் தொடர்பாக நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள், பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், விதிக்கப்பட்டுள்ள அபராதம், கடை சீல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும், மேலும் பள்ளி மற்றும் கல்லூரி இருக்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வுகள் குறித்த விவரம், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடம் மேற்கொள்ளப்பட்ட போதை பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்த விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் தடை செய்யப்பட்ட போதை பொருள் தடுப்பு தொடர்பான ஆய்வுகளை மேலும் தீவிரப்படுத்தி தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு அதிக ஆய்வுகளை மேற்கொள்ளவும் அனைத்து கிராமங்களிலும் போதை பொருள் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலரை தலைவராக கொண்ட கிராம அளவிலான கண்காணிப்பு குழு கூட்டத்தை ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை தோறும் நடத்தி அது தொடர்பான அறிக்கையை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, திருக்கோவிலூர் துணை ஆட்சியர் ஆனந்த்குமார்சிங் மற்றும் காவல்துறை உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் நிகழ்வுகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க வேண்டும் appeared first on Dinakaran.