சிறுமலை தோட்டக்கலை பண்ணையில் 70 ஆயிரம் நாட்டு ரக பாக்கு செடி உற்பத்தி: குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கல்

சேலம், ஏப். 28: சேலம் அடுத்த சிறுமலை தோட்டக்கலை பண்ணையில் 70 ஆயிரம் நாட்டு ரக பாக்கு செடி உற்பத்தி செய்யப்பட்டு, குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அடுத்த அருநூத்துமலை சிறுமலை கிராமத்தில், தோட்டக்கலை துறை மூலம், தோட்டக்கலை பண்ணை செயல்பட்டு வருகிறது.

பாக்கிற்கு பெயர்பெற்ற சேலம் மாவட்ட விவசாயிகளுக்காக சிறுமலை அரசு தோட்டக்கலை பண்ணையில், அதிகளவில் நாட்டு ரக பாக்கு செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள நிலையில், சுமார் 70 ஆயிரம் நாட்டு ரக பாக்கு செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்துள்ளபடி ரூ.15 என்ற அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

மேலும் இப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் மா-பக்க ஒட்டு செடிகள், மா-குறுந்தண்டு ஒட்டு செடிகள், நெல்லி ஒட்டு செடிகள், கொய்யா, குண்டு மல்லி, கருவேப்பிலை, எலுமிச்சை, பப்பாளி மற்றும் பிற அழகு செடிகள் ஆகியவை தரமான நாற்று மற்றும் செடிகளாக உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. தற்போது, எலுமிச்சை 5,150, கருவேப்பிலை 7,888, மல்லிகை 4,600, நெல்லி ஒட்டு செடி 4,990, மா பக்க ஒட்டு செடி 5,590, மலை சவுக்கு 12,200 மற்றும் மிளகு 1,100 என செடிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் எலுமிச்சை, கருவேப்பிலை, மல்லிகை, சில்வர் ஓக் மற்றும் மிளகு செடிகள் தலா ரூ.15, நெல்லி ஒட்டு செடி ரூ.50, மா பக்கஒட்டு செடி ரூ.80 என விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விவசாயிகள் பண்ணையை நேரடியாகப் பார்வையிட்டு தங்களுக்கு தேவையான செடிகளை வாங்கி பயனடையுமாறு பண்ணைத் தோட்டக்கலை அலுவலர் மதுமிதா தெரிவித்துள்ளார். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர் பாஸ்கரை, 76397 80782 மற்றும் 96988 83076 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

The post சிறுமலை தோட்டக்கலை பண்ணையில் 70 ஆயிரம் நாட்டு ரக பாக்கு செடி உற்பத்தி: குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: