ரூ.75 கோடி செலவில் 50 பேருந்து பணிமனைகளில் உள்கட்டமைப்புகள் புதுப்பிக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சிவசங்கர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவை பின்வருமாறு:
*மாநகர் போக்குவரத்து கழகம் கீழ் செயல்படும் அயனாவரம், முகப்பேர்(கிழக்கு), எம்எம்டிஏ காலனி, திருவேற்காடு, பெசன்ட் நகர் மற்றும் கண்ணகி நகர் ஆகிய ஆறு பேருந்து முனையங்களில், பயணிகளுக்கு தேவையான இருக்கைகள், நேரக்காப்பாளர் அறை, கழிப்பறை வசதி, பயணிகள் காத்திருப்பு பகுதி, சுத்தமான குடிநீர் மற்றும் தரைத்தள வசதிகள் உள்ளிட்டவை ரூ.7.5 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
* அதிநவீன உபகரணங்கள் மற்றும் கருவிகள் மூலம் தொழில்நுட்ப உற்பத்தித்திறனை பணிமனைகளில் அதிகரிக்க ஒரு பணிமனைக்கு ரூ.1.05 கோடி வீதம், எட்டு பணிமனைகளுக்கு ரூ.8.4 கோடி செலவில் அதிநவீன உபகரணங்கள் வழங்கப்பட்டு தொழில்நுட்ப உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும்.

* தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் 50 பேருந்து பணிமனைகளில் உள்கட்டமைப்புகள் ஒரு பணிமனைக்கு ரூ.1.5 கோடி வீதம், 50 பணிமனைகள் ரூ.75 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.
* தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் பணிமனைகளில், நைட்ரஜன் காற்று நிரப்பும் இயந்திரங்களை அமைத்து உருளிப்பட்டை(tyre) பராமரிப்பை மேம்படுத்த ஒரு பணிமனைக்கு ரூ.2.5லட்சம் வீதம், 100 பணிமனைகளில் ரூ.2.50 கோடியில் அமைக்கப்படும்.
* போக்குவரத்து கழக பேருந்துகளில் நான்கு வெளிப்புற கேமராக்களை பொருத்த ஒரு பேருந்துக்கு ரூ.37,500 வீதம் 4000 பேருந்துகளுக்கு ரூ.15 கோடி செலவில் கேமராக்கள் பொருத்தப்படும்.
* பேருந்துகளை ஓட்டுநர்கள் ஓட்டும் முறையை மேம்படுத்தும் விதமாகவும், விபத்துகளை குறைக்கும் விதமாகவும், பேருந்துகளில் முன்னோடி முயற்சியாக ஏஐ மற்றும் ஐஆர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஓட்டுநர் கண்காணிப்பு அமைப்பு, ஒரு பேருந்துக்கு ரூ.40,000 வீதம் 500 பேருந்துகளுக்கு ரூ.2 கோடி செலவில் கண்காணிப்பு அமைப்புகள் பொருத்தப்படும்.

* மோட்டார் வாகன பராமரிப்பு துறையின் 20 அரசு தானியங்கி பணிமனைகள் மற்றும் இயக்குநர் அலுவலகத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டு எல்இடி திரை வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் எல்காட் நிறுவனம் மூலம் ரூ.1.10 கோடி செலவில் பொருத்தப்படும்.
* தஞ்சாவூர், திருநெல்வேலி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் தருமபுரியில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளை நவீன மயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல் ஆகியவைக்கு ரூ.1 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
* திருச்சி மற்றும் சேலத்தில் இயங்கி வரும் ஓட்டுநர் புத்தாக்க பயிற்சி மையத்தில் கலந்துக்கொள்ளும் அரசுத்துறை ஓட்டுநர்களுக்கு மூன்று நாட்கள் தங்கி பயிற்சியில் கலந்து கொள்வதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.1.10 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

* புதிய நவீனரக வாகனங்களின் மின்னணு பழுதுகளை கண்டறியும் கருவிகளை மோட்டார் வாகனப் பராமரிப்பு துறையில் கோவை, நெல்லை, தஞ்சை, வேலூர் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளுக்கு ரூ.30 லட்சம் செலவில் மின்னணு பழுதுகளை கண்டறியும் கருவிகள் கொள்முதல் செய்து வழங்கப்படும்.
* காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு ஓட்டுநர் தேர்வு தளத்துடன் கூடிய சொந்த கட்டடம் ரூ.7.27 கோடி செலவில் கட்டப்படும்.
* போக்குவரத்து துறையின் மின்னணு அலுவலக பயன்பாட்டிற்காகவும், நிர்வாகத்தின் சீரான செயல்பாட்டிற்காகவும், வருங்கால மின்னணு ஆளுமை நோக்கத்திற்காகவும் அனைத்து பணியாளர்களின் பயன்பாட்டிற்காகவும் 596 கணினிகள், 269 அச்சுப் பொறிகள் மற்றும் 269 ஸ்கேனர்கள் ரூ.4.88 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்.
* சாலை விபத்துகளைத் தடுப்பதற்கும் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் 2025-2026ம் ஆண்டிற்கு சாலைப் பாதுகாப்பு நிதி ரூ.65 கோடியிலிருந்து ரூ.130 கோடியாக உயர்த்தப்படும்.

The post ரூ.75 கோடி செலவில் 50 பேருந்து பணிமனைகளில் உள்கட்டமைப்புகள் புதுப்பிக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: