பிரதமர் மோடி பயணத்தின் போது விடுவிக்கப்பட்ட 14 மீனவர்களும் தமிழகம் அனுப்பப்படாதது ஏன்?.. காரணம் தெரியாமல் குடும்பத்தினர் கவலை

* 2 வாரங்களாக காலம் தாழ்த்தும் இலங்கை

ராமேஸ்வரம்: பிரதமரின் இலங்கை பயணத்தின் போது விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் தமிழகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். இந்தியா, இலங்கை இடையே முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஏப்ரல் 5ம் தேதி பிரதமர் மோடி இலங்கை சென்றார். பிரதமரின் வருகையை முன்னிட்டு, இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை விடுவிப்பதாக ஏப். 6ம் தேதி இலங்கை அரசு அறிவித்தது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.

இதில் கடந்த மார்ச் 26ம் தேதி ஜெர்சிஸ் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற பாக்கியராஜ் (38), சவேரியார் அடிமை (35), முத்து களஞ்சியம் (27), எபிரோன் (35), ரஞ்சித் (33), பாலா (38), யோவான்ஸ் நானன் (36), இன்னாசி (37), ஆர்னாட் ரிச்சே (36), அன்றன் (45), அந்தோணி சிசோரியன் (43) ஆகிய 11 பேர், கென்னடி என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற சங்கர் (53), அர்ஜூனன் (35), முருகேசன் (49) ஆகிய மூன்று பேர் என மொத்தம் 14 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீனவர்கள் அனைவரும் கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஆனால் 2 வாரங்கள் கடந்துள்ள நிலையில், இலங்கை அரசு அவர்களை இன்னும் தமிழகத்துக்கு திருப்பி அனுப்பாதது ஏன் என மீனவர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும் மீனவர்கள் ஒரு வாரத்திற்குள் தாயகம் திரும்புவது வழக்கம். ஆனால் பிரதமர் மோடி பயணத்தின் எதிரொலியாக விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை தமிழகம் அனுப்பி வைக்க இலங்கை அரசு காலம் தாழ்த்துவதில் இருக்கும் மர்மம் என்ன என மீனவ மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை விரைந்து தமிழகம் அனுப்பி வைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பிரதமர் மோடி பயணத்தின் போது விடுவிக்கப்பட்ட 14 மீனவர்களும் தமிழகம் அனுப்பப்படாதது ஏன்?.. காரணம் தெரியாமல் குடும்பத்தினர் கவலை appeared first on Dinakaran.

Related Stories: