‘இருட்டுக் கடையை’ வரதட்சணையாக கேட்ட புகார்: மாப்பிள்ளை போலீசில் ஆஜராக 10 நாள் அவகாசம் கோரி மனு


கேடிசி நகர்: நெல்லை டவுன் ‘இருட்டுக் கடையை’ வரதட்சணையாக கேட்ட மாப்பிள்ளை நெல்லை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜராக 10 நாட்கள் கூடுதல் அவகாசம் கோரி மனு தாக்கல் செய்தார். நெல்லை டவுன் இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் கவிதாசிங். இவரது மகள் கனிஷ்காவிற்கும், கோவையைச் சேர்ந்த பல்ராம்சிங்குக்கும் கடந்த பிப்.2ம் தேதி நெல்லை தாழையூத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர், கனிஷ்கா அவரது கணவருடன் கோவையில் வசித்து வந்த நிலையில், பல்ராம்சிங்கிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக புகார் கூறப்படுகிறது. அதை கனிஷ்கா கண்டித்ததால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதையடுத்து மார்ச் 15ம் தேதி நெல்லையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு கனிஷ்கா வந்து விட்டார்.

மறுநாள் இரவு பல்ராம் சிங்கும், அவரது குடும்பத்தினரும், கவிதாசிங் வீட்டுக்கு வந்து, கனிஷ்காவுடன் வாழ கூடுதல் வரதட்சணை தர வேண்டும் என்றும், நெல்லை டவுன் இருட்டுக் கடையை பல்ராம்சிங் பெயருக்கு எழுதித்தர வேண்டும் என்றும் மிரட்டியதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி கவிதாசிங், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் அளித்தார். கனிஷ்காவும் இதுபற்றி முதல்வர் தனிப்பிரிவிற்கு மனு அளித்தார். அதே நேரத்தில் வரதட்சணை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என பல்ராம்சிங்கின் தந்தை கோவையில் பேட்டி அளித்தார். இதுபற்றி விசாரிக்க நெல்லை அனைத்து மகளிர் போலீசார், கவிதாசிங்கின் மருமகன் பல்ராம்சிங்கிற்கு நெல்லை மகளிர் போலீஸ் நிலையத்தில் 21ம் தேதி (நேற்று) ஆஜராக சம்மன் அனுப்பினர், ஆனால் அவர் நேற்று வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை.

அவரது செல்போனை தொடர்பு கொண்ட போதும் இணைப்பு கிடைக்கவில்லை. பல்ராம்சிங் தரப்பில் ஜூனியர் வக்கீல் கரும்பன் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பல்ராம்சிங் வெளியூர் சென்றிருப்பதால் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக 10 நாள் அவகாசம் கோரி புதிய மனு அளித்தார். இதுகுறித்து நெல்லை மகளிர் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

The post ‘இருட்டுக் கடையை’ வரதட்சணையாக கேட்ட புகார்: மாப்பிள்ளை போலீசில் ஆஜராக 10 நாள் அவகாசம் கோரி மனு appeared first on Dinakaran.

Related Stories: