கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க குளுகுளு சம்மர் காட்டன் சேலைகள்: ரூ.800 முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை


காரைக்குடி: கோடை வெயிலை சமாளிக்க புதிதாக தற்போது சம்மர் காட்டன் சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 150 ஆண்டுகளுக்கு மேலாக காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் சேலைகளுக்கு கெட்டிச்சாயம் பயன்படுத்துகின்றனர். இதனால் சேலைகள் சாயம் போகாது என்பது சிறப்பு. காரைக்குடி, கானாடுகாத்தான், கோவிலூர் பகுதிகளில் தறிகள் இயங்கி வருகின்றன. இங்கு புதிய டிசைன்களுடன் 150 ஆண்டுகளாக பழமை மாறாமல் அதே தரத்துடன் செட்டிநாட்டு ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. பாரம்பரியமிக்க கோர்வை சேலைகள், கூரை நாட்டு சேலைகள், புட்டா, செட்டிநாடு காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மறைந்து போன பழமையான சேலை ரகங்களை மீண்டும் உற்பத்தி செய்ய துவங்கி உள்ளனர்.

இச்சேலைகள் நேரடியாக ஏற்றுமதி செய்யப்படாவிட்டாலும், பல்வேறு தனியார் நிறுவனங்கள் வாங்கி பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர். தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சி கழகம் www.loomworld.in என்ற ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறது. தற்போது கோடை காலம் துவங்கியிருப்பதை முன்னிட்டு கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக நெசவாளர்கள் தெரிவித்தனர். சம்மர் ஸ்பெஷலாக எடை குறைவாக காட்டன் சேலைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர். இது இளம்பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என நெசவாளர்கள் கூறுகின்றனர். கைத்தறி நெசவாளர்கள் கூறுகையில், ‘‘கைத்தறி சேலைகள் உடுத்துவது உடலுக்கு நல்லது. காட்டன் சேலை உடுத்துவதால் கோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்னைகளை தவிர்க்கலாம். தற்போது பழைய டிசைன் சேலைகளை மீண்டும் நெய்து வருகிறோம்.

கண்டாங்கி சேலைகளை பொறுத்தவரை முன்பு உயரம் குறைவாக இருக்கும். அதனை தற்போது உள்ள காலத்திற்கு தகுந்தாற்போல் தயார் செய்கிறோம். அதேபோல் எடை குறைவான சேலைகளை நெய்கிறோம். இவற்றை கல்லூரி மாணவிகள், டாக்டர்கள் அதிகம் வாங்கி பயன்படுத்துகின்றனர். கோடை காலத்துக்கு என தற்போது 6.20 மீட்டரில் சேலை மற்றும் ஜாக்கெட்டுடன் சேர்த்து தயாரித்து வருகிறோம். இதுதவிர ருத்ராட்சம், அன்னபட்சி பார்டர், வைர ஊசி டிசைன், தேன்கிண்ணம் காட்டன் என பல்வேறு டிசைன்கள் உற்பத்தி செய்கிறோம். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடல்கள் உள்ளன. 15 நாட்களுக்கு ஒரு முறை டிசைன் மாற்றுகிறோம். ரூ.800 முதல் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் வரை காட்டன் சேலைகள் விற்பனைக்கு உள்ளன. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர்’’ என்றனர்.

The post கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க குளுகுளு சம்மர் காட்டன் சேலைகள்: ரூ.800 முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: